தமிழ்நாடு

‘எங்களை காப்பாத்துங்க’ - மாவட்ட ஆட்சியர் காலில் விழுந்து கதறிய தம்பதி; என்னக் காரணம்!

PT

புவனகிரி அருகே தங்களது இடத்தை மீட்டுதரக்கோரி, மாவட்ட ஆட்சியரின் காலில் விழுந்து ‘எங்களை காப்பாத்துங்க’ என்று கணவன் - மனைவி கண் கலங்கிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கடலூர் மாவட்டம், புவனகிரி அருகே உளுத்தூர் கிராமத்தில் வசித்து வருபவர் கூலித் தொழிலாளியான ஜெயகாந்தன். இவரது பக்கத்து வீட்டில் வசித்து வருபவர், ஜெயகாந்தனின் வீட்டு மனையை அபகரித்து காம்பவுண்ட் பில்லர் போட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து அதனை தட்டிக்கேட்ட ஜெயகாந்தன் மற்றும் அவரது மனைவி சிவகாம சுந்தரி இருவரையும், பக்கத்து வீட்டைச் சேர்ந்தவரின் ஆதரவாளர்கள் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், மருதூர் வள்ளலார் அவதார இல்லத்திற்கு மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியன் வந்துள்ளார். அப்போது, ஆட்சியர் காரை விட்டு இறங்கியவுடன், ஜெயகாந்தன் மற்றும் அவரது மனைவி சிவகாமசுந்தரி ஆகிய இருவரும் அவரது காலில் விழுந்தனர். அவர்களிடம் ‘என்னப் பிரச்சனை’ என கேட்ட ஆட்சியரிடம், வீட்டுமனை பிரச்சனை காரணமாக வீடு அருகில் இருப்பவர் ஒருவர் தங்கள் இருவரையும் தாக்கிவிட்டதாகக் கூறினர். இதுகுறித்து முழு விவரம் கேட்டு அறிந்த மாவட்ட ஆட்சியர், உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கோரி மருதூர் காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.