தமிழ்நாடு

பவானிசாகர் அணைக்கு வரும் நீரின் வரத்து குறைந்தது 

webteam

பவானிசாகர் அணைக்கு வரும் நீரின் வரத்து 3,500 கனஅடியாக குறைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. 

105 அடி உயரமும் 32.8 டிஎம்சி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள  2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. கடந்த வாரம் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 96 அடியாக இருந்த நிலையில் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்ததால் அணைக்கு நீர்வரத்து 12,500 கன அடியாக அதிகரித்தது. 

இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து, கடந்த 3 தினங்களுக்கு முன்பு 102 அடியை எட்டியது. இதையடுத்து அணைக்கு வரும் 12,500 கனஅடி உபரிநீர் மேல் மதகுகள் வழியாக பவானி ஆற்றில் விடப்பட்டது. 

இந்நிலையில் நேற்று அணைக்கு நீர்வரத்து 8 ஆயிரம் கனஅடியாகவும் நேற்று மாலை 3,500 கனஅடியாகவும் குறைந்தது. இதையடுத்து அணையிலிருந்து வெளியேற்றப்படும் உபரிநீரின் அளவு படிப்படியாக குறைக்கப்பட்டது.  அணையிலிருந்து பவானி ஆற்றில் 2,100 கனஅடி நீரும், கீழ்பவானி வாய்க்காலில் 1,500 கனஅடி நீரும் என மொத்தம் 3,600 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.
 
அணையின் மேல் மதகுகளில் வெளியேற்றப்படும் தண்ணீர் வெண்ணிறத்திலும், கீழ் மதகில் வெளியேற்றப்படும் தண்ணீர் செந்நிறத்திலும் உள்ளது. நீர்த்தேக்கப்பகுதியில் மேல் பகுதி தண்ணீர் தெளிந்த நிலையில் உள்ளதாலும், கீழ்பகுதி செந்நிறமாக உள்ளதாலும் இரு நிறங்களில் கலந்த தண்ணீர் வெளியேறி பவானி ஆற்றில் ஒன்றாக கலந்து செல்கிறது. இந்தக் காட்சி பார்க்க மிக அழகாக உள்ளது.