தமிழ்நாடு

அஷ்னீர் குரோவர் முதல் அவரது மனைவி மாதுரி விடுப்பு வரை.. `பாரத் பே'வை தொடரும் சர்ச்சைகள்!

நிவேதா ஜெகராஜா

இந்தியாவின் தொழில்நுட்பம் சார்ந்த நிதி பரிமாற்ற தளமான ‘பாரத்பே’, அல்வரெஸ் மற்றும் மார்செல் ஆகிய இருவரை தங்கள் நிறுவனத்துக்கு ஆடிட் செய்யவும், உள் செயல்முறைகள் மற்றும் அமைப்புகளை மேம்படுத்தவும் பணியமர்த்தியுள்ளது.

இதுதொடர்பாக இன்று அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், “மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனமான பாரத் பே-வின் உறுப்பினர் குழு சார்பில், உள் செயல்முறைகள் மற்றும் அமைப்புகளுக்கான தணிக்கை கணக்கு நிர்ணயிக்கும் தணிக்கை அறிக்கை குழு தொடங்கப்படுகிறது. இதற்காக பார்த் பே நிறுவன விதிகளின்படி மூத்த நிர்வாக ஆலோசகர் (management consultant) மற்றும் ஆபத்து காலத்தின்போது செயல்படும் ஆலோசகரான (risk advisory firm) அல்வரெஸ் மற்றும் மார்செல் ஆகியோர் நியமிக்கப்படுகின்றனர். இதன்மூலம் பாரத்பே நிறுவனத்தினை சார்ந்து இயங்கும் பங்குதாரர்கள், வாடிக்கையாளர்கள், பயனாளர்கள் ஆகியோரின் பங்குகள் பாதுகாக்கப்படும் என தலைமை குழு உறுதியாக நம்புகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 10 நாள்களுக்கு முன்னர்தான், சர்ச்சையில் சிக்கிய ‘பாரத்பே’-வின் இணை நிறுவனர் அஷ்னீர் குரோவர் நீண்ட கால விடுப்பில் சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இவர், கோடாக் குழும ஊழியரிடம் அநாகரீகமான வார்த்தைகளை பயன்படுத்தி பேசியதாக வெளியான ஆடியோ கிளிப்தான் அவரது நீண்ட கால விடுப்புக்கு காரணமாக அமைந்திருந்தது. அந்த ஆடியோவை நான் பேசவில்லை எனக்கூறி முதலில் ட்வீட் போட்ட அவர், பின்னர் அதை டெலிட் செய்தும் இருந்தது குறிப்பிடத்தக்கது. இப்படியாக சர்ச்சையான நேரத்தில், அதுவும் இணை நிறுவனராக அஷ்னீர் விடுப்பிலிருக்கும் இந்த நேரத்தில், நிறுவனத்தின் மிக முக்கியமான நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது பல தரப்பிலிருந்தும் விமர்சனங்களையும் பெற்றுவருகிறது.

இச்சம்பவத்தில் அன்ஷீர் மட்டுமன்றி, அவரது மனைவி மாதுரியும் தொடர்புபட்டிருப்பதாக செய்திகள் வெளியாகின. இப்படியான சூழலில் இன்றைய தினம் அஷ்னீர் குரோவரின் மனைவி மாதுரியும் விடுப்பில் சென்றிருக்கிறார். மாதுரியும், பாரத்பே நிறுவனத்தில் முக்கிய பொறுப்பிலிருந்தவரென்பது குறிப்பிடத்தக்கது. அப்படியிருக்க, மாதுரியின் விடுப்பு குறித்து எவ்வித கருத்தும் தெரிவிக்காத பாரத்-பே நிறுவனம், தணிக்கை கணக்கு வழக்குக்கான துறையை தொடங்கியிருப்பதற்கு மட்டும் அறிக்கை விடுத்திருப்பது சர்ச்சையை இன்னும் அதிகப்படுத்தியுள்ளது.

அன்ஷீர் மற்றும் மாதுரியின் விடுப்பு, நிறுவனத்தின் தணிக்கை அறிக்கை குழு ஆகியவற்றை பார்க்கையில் விரைவில் ஆடியோ விவகாரம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.