தமிழ்நாடு

ரிஷிகளாலும், சனாதன தர்மத்தாலும் உருவாக்கப்பட்டது பாரதம் - ஆளுநர் ஆர்என்.ரவி பேச்சு

webteam

ரிஷிகளாலும், சனாதன தர்மத்தினாலும் உருவாக்கப்பட்டது பாரதம். பல நூற்றாண்டு கால பழமையான வரலாற்றை அனைவருக்கும் மறு அறிமுகம் செய்வதற்கு பிரதமர் மோடி எடுத்த தைரியமான முடிவு காசி தமிழ் சங்கமம் என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.

சென்னை ஐஐடி மெட்ராஸ் மற்றும் பனாரஸ் இந்து பல்கலைக் கழகம் ஆகியவற்றின் பங்களிப்புடன் காசி தமிழ் சங்கம் நிகழ்ச்சி நவம்பர் 16 முதல் டிசம்பர் 20ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில், தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் இருந்து 3 ஆயிரம் சிறப்பு விருந்தினர்கள் காசியை பார்வையிட அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.

இந்த நிகழ்ச்சியின் துவக்க விழா சென்னை ஐஐடியில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஆளுநர் ஆர்.என்.ரவி பேசும்போது " தமிழகத்திற்கும் காசிக்கும் இடையேயான பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தொடர்பை அனைவருக்கும் தெரியப்படுத்துவதற்கான ஓர் அரிய முயற்சி இது."

"காசி முதல் ராமேஸ்வரம் வரை ஏராளமான சத்திரங்கள் கட்டப்பட்டுள்ளன. இதை பல்லாயிரக்கணக்கான பக்தர்களும், பொதுமக்களும் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்பது தெரிய வருகிறது. பல நூற்றாண்டுகளுக்கு மேற்பட்டது இந்த காசி, ராமேஸ்வரம், காஞ்சிபுரம் இடையேயான பாரம்பரிய கலாச்சார உறவு. மிகப்பெரிய ஆன்மிக புரிதலோடு ஏராளமான பயணிகள் அங்கிருந்து இங்கு வருவதும், இங்கிருந்து அங்கு செல்வதும் நடைபெற்று இருக்கிறது."

"சிலப்பதிகாரம். மணிமேகலை, மற்றும் தொல்காப்பியம் ஆகியவற்றில் காசிக்கும் ராமேஸ்வரத்திற்கும் மதுரைக்கும் இடையேயான உறவு குறிப்பிடப்பட்டுள்ளது பாரதம் என்பது ரிஷிகளாலும், சனாதன தர்மத்தினாலும் உருவாக்கப்பட்டது. பல நூற்றாண்டு கால பழமையான வரலாற்றை அனைவரும் மறு அறிமுகம் செய்வதற்கு பிரதமர் மோடி எடுத்த தைரியமான முடிவு இது. இதில், எந்தவிதமான அரசியலும் கிடையாது" எனக் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர் எம்பி மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் கலந்து கொண்டனர்.