எதிர்க்கட்சிகள் சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் நிலையில் சென்னையில் இன்று அரசுப் பேருந்துகள் வழக்கம்போல ஓடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து எதிர்க்கட்சிகள் சார்பில் நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டத்திற்கு இன்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் காலை 9 மணிக்குத் தொடங்கி மாலை 3 மணி வரை முழு அடைப்பு நடைபெறுகிறது. அதன் பிறகு மாலை 4 மணிக்கு மாவட்டத் தலைநகரங்களில் அனைத்துக் கட்சிகள் பங்கேற்கும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. தமிழகத்தில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூ., இந்திய கம்யூ., மனிதநேய மக்கள் கட்சி ஆகிய கட்சிகள் பங்கேற்கின்றன.
Read Also -> 5 லிட்டர் பெட்ரோல் வாங்கினால் 1 லிட்டர் இலவசம்..!
இந்நிலையில் சென்னையில் அரசுப் பேருந்துகள் வழக்கம்போல ஓடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசுப் பேருந்துகள் தடையின்றி இயங்கும் வகையில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர். சென்னையில் மட்டும் 20,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். அதேசமயம் ஆட்டோ, வேன்கள் ஓடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமில்லாமல் சுமார் 4 1/2 லட்சம் லாரிகள் ஓடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே பால் விற்பனை நிலையம், மருந்தகம், பெட்ரோல் பங்குகள் இந்த முழு வேலை நிறுத்த போராட்டத்தில் இருந்து விலக்கு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.