திருவண்ணாமலை மகா தீபம் PT
தமிழ்நாடு

கார்த்திகை தீபத் திருவிழா: திருவண்ணாமலை கோயிலில் பரணி தீபம் ஏற்றம்.. மாலையில் மகாதீபம்!

கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் அதிகாலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது..

Rishan Vengai

கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி உலக பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் சன்னதியில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.

அதிகாலை 4 மணியளவில் அண்ணாமலையார் கருவறை முன்பாக, சூரிய சந்திரன் எதிரே ஏகன் அனேகனாக மாறும் தத்துவத்தை விளக்கும் விதமாக, கோயிலின் கருவறையில் இருந்து கொண்டு வரப்பட்ட தீபத்தினை கொண்டு 5 மடக்குகளில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.

திருவண்ணாமலை கோவில்

அண்ணாமலையாருக்கு அரோகரா என்ற முழக்கம் விண்ணைப் பிளக்க, பெருந்திரளான பக்தர்கள் பரணி தீப தரிசனத்தை கண்டுகளித்தனர்.

மாலை 6 மணிக்கு மகாதீபம்..

திருவண்ணாமலையில் பரணி தீபத்தை தொடர்ந்து இன்று மாலை மகாதீபம் ஏற்றப்படுகிறது. மாலை 6 மணியளவில் கோயிலின் பின்புறம் உள்ள 2 ஆயிரத்து 668 அடி உயரமுள்ள மலையின் உச்சியில் மகாதீபம் ஏற்றப்படும். மகாதீப தரிசனத்தை காண பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருவதால், திருவண்ணாமலை நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

திருவண்ணாமலையில் உள்ள 2,668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது

மகாதீபத்தையொட்டி ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் 15 ஆயிரம் காவலர்கள், திருவண்ணாமலை மாநகராட்சி முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நெல்லையப்பர் கோயிலில் பரணி தீபம்..

கார்த்திகை தீபத்திருவிழாவை ஒட்டிதிருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் பிரத்யேக கொப்பரையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. நெல்லையப்பர் கோயிலில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா 2 நாட்கள் நடைபெறும். முதல் நாள் பரணி தீபமும், 2ஆம் நாள் ருத்ர தீபமும் ஏற்றப்படும். இதன்படி பரணி தீபத்தை முன்னிட்டு சுவாமி சன்னதி முன்பு அமைந்துள்ள விநாயகர், நெல்லையப்பருக்கு சிறப்பு பூஜைகள்செய்து, சுவாமி முன்பிருந்து தீபம் எடுத்துவரப்பட்டது.

நெல்லையப்பர் கோயிலில் பரணி தீபம்..

சுவாமி சன்னதி மகாமண்டபத்தில் பிரத்யேக கொப்பறையில் அமைக்கப்பட்டிருந்த திரியில் பரணிதீபம் ஏற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ருத்ர தீபம் ஏற்றும் நிகழ்வுக்காக கோயிலில் பரணி தீபம் 24மணி நேரம் தொடர்ந்து எரியும்வகையில் ஏற்பாடுகள்செய்யப்பட்டுள்ளன.