தமிழ்நாடு

மார்கழி மாதம் முழுக்க திருக்கோவில்களில் நடந்த பஜனை திருவிழா! இன்று தை முதல்நாளில் நிறைவு!

webteam

திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு திருக்கோவில்களில் மார்கழி மாதம் 30 நாட்களும் நடந்த பஜனை திருவிழா, இன்று தைத்திங்கள் முதல் நாளில் நிறைவடைந்தது.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டம் மேலத்திருப்பாலக்குடி கிராமத்தில் கடந்த 300 ஆண்டுகளுக்கு மேலாக, மார்கழி மாதம் 30 நாட்களும் பஜனை பாடி தை மாதம் முதல் நாளில் நிறைவு செய்வார்கள்.

இந்த திருக்கோவில் திருவிழாவை ராமு என்பவர் சுமார் 80 ஆண்டுகளுக்கு மேலாக பஜனை குழுவை நடத்தி வந்துள்ளார். அவர் மறைந்த பிறகு தொடர்ந்து இவருடைய பெயரில், அவரின் நினைவாக இந்த ஊர் பெரியவர்கள் மற்றும் சிறார்கள் பாடி வருகிறார்கள்.

இந்நிலையில் கடந்த 30 நாட்களாக பாடி வந்த இவர்கள், இன்று தை மாதம் முதல் நாளில் மார்கழி பஜனையை நிறைவு செய்தார்கள். நாள்தோறும் சுமார் 50க்கும் மேற்பட்ட சிறார்கள் மற்றும் பெரியவர்கள் மார்கழி மாதம் முழுவதும் ஊரை சுற்றி வந்து, திருவாசகம் மற்றும் தேவாரம் உள்ளிட்ட பாடல்களை பாடி வந்தார்கள். இறுதி நாளான தை மாதம் முதல்நாளில் இன்றும் பஜனை பாடி, இந்த மார்கழி மாத பஜனை நிகழ்ச்சியை நிறைவு செய்துள்ளார்கள்.

இந்த இறை வழிபாட்டு நிகழ்வுகளை நடத்தி வரும் மனோகரன் என்ற ஆசிரியர், மார்கழி மாதத்தின் 30 நாட்களிலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் விடியற்காலையில் எழுந்து குளித்து தெய்வீக பாடல்கள் பாடிய சிறார்களுக்கும், பெரியவர்களுக்கும் பரிசு வழங்கி நிறைவு செய்தார்.