தென் தமிழகம், டெல்டா மாவட்டங்களில் அடுத்த 24 மணிநேரத்தில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது
கஜா புயலுக்கு பிறகு தென்மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானது. பின்னர் அது வலுகுறைந்து தமிழகத்தின் உள் பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக நீடித்தது. இதன் காரணமாக டெல்டா பகுதிகளிலும் சில இடங்களில் கனமழை பெய்தது. சென்னையைப் பொறுத்தவரை இடைவெளிவிட்டு சிலமுறை மழை பெய்தது.
இந்நிலையில் தென் தமிழகம், டெல்டா மாவட்டங்களில் அடுத்த 24 மணிநேரத்தில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, ''சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பெரிய அளவு மழை இருக்காது. இந்த மாவட்டங்களில் லேசான மழை ஒரு சில பகுதிகளில் பெய்யக்கூடும். கடந்த 24 மணிநேரத்தில் திருத்துறைப்பூண்டியில் அதிகபட்சமாக 10 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்த தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப்ஜான், ''நாகை, திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களிலும் நெல்லை, கன்னியாகுமரி, மதுரை, தூத்துக்குடி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட தமிழ்நாட்டின் உள்மாவட்டங்களில் இன்று மழை பெய்யும். டிசம்பர் 1 ஆம் தேதி மழை படிப்படியாக குறையும்.
(வெதர்மேன் பிரதீப்ஜான்)
சிலர் இந்த மாத இறுதி வரை புயல் இருக்கும் என கணித்து கூறி வருகின்றனர். இது குறைந்த காற்றழுத்தம் கூட கிடையாது. மக்களிடையே பயத்தை பரப்ப கூடாது. வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம். டிசம்பர் மாதத்தில் தமிழகத்தில் மழை இருந்தாலும் இந்த வருடம் சாதாரணமாகவே இருக்கும். இம்மாத இறுதியில் புதிதாக புயல் ஏதும் உருவாக வாய்ப்பில்லை'' என்று தெரிவித்துள்ளார்