தமிழ்நாடு

காதல் தோல்வியில் தற்கொலைக்கு முயன்ற நபரை காப்பாற்றிய பெசன்ட் நகர் மீட்பு குழு காவலர்கள்

நிவேதா ஜெகராஜா

சென்னை பெருநகர காவல்துறையின் கீழ் இயங்கும் பெசன்ட் நகர் காவல் மீட்பு குழுவினர், பெசன்ட் நகர் கடற்கரையில் தற்கொலைக்கு முயன்ற ஒருவரை இன்று மீட்டுள்ளனர்.

இன்று பெசன்ட் நகர் கடற்கரையில் காவலர்கள் பணியில் இருந்தபோது, அங்கு பேசிக் கொண்டிருந்த நபர்களில் ஒருவர் திடீரென கடலில் மூழ்கி தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதைக்கண்ட அங்கு பணியிலிருந்த பெசன்ட் நகர் காவல் மீட்பு குழு காவலர்கள் சபின் மற்றும் ராஜா ஆகிய இருவரும், உடனே கடலுக்குள் நீந்திச் சென்று தற்கொலைக்கு முயன்ற நபரை மீட்டு, கரைக்கு அழைத்து வந்தனர்.

விசாரணையில் தற்கொலைக்கு முயன்ற அந்நபர் ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரியைச் சேர்ந்த வெங்கடேஸ்வர ராவ் என்பவரின் மகன் ரேலங்கி பணீந்திரகுமார் (வயது 30) என்பதும், அவர் சென்னையில் வேலை செய்யும் பெண்ணொருவரை காதலித்து வந்ததும், அந்தக் காதல் முறிந்ததால் அவர் மனமுடைந்து தற்கொலைக்கு முயன்றதும் தெரியவந்துள்ளது.

தற்கொலைக்கு முயன்ற நபரை கடலுக்குள் நீந்திச்சென்று உயிரை காப்பாற்றிய காவலர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் பாராட்டியுள்ளார்.