பெங்களூரு போரிங் மருத்துவமனையில் சசிகலாவுக்கு ஆக்ஸிஜன் கொடுக்கப்பட்டு சிகிச்சை அளித்துவருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.
சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை முடிந்து வரும் 27 ஆம் தேதி பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து சசிகலா விடுதலையாவது உறுதியாகியுள்ளது. இந்தச் சூழலில் சிறையில் அவருக்கு திடீரென மூச்சுத் திணறலும், காய்ச்சலும் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியது. உடனடியாக சசிகலா இருந்த அறைக்கு விரைந்த சிறைத்துறை மருத்துவர்கள் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். அப்போது அவருக்கு மூச்சுத் திணறலுடன், காய்ச்சலும் ஏற்பட்டிருப்பது மருத்துவ பரிசோதனையில் தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து, அவரை அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்க சிறைத்துறை மருத்துவர்கள் முடிவு செய்தனர். அதன் அடிப்படையில் சக்கர நாற்காலியில் அமர வைக்கப்பட்டு பெங்களூருவில் உள்ள போரிங் அரசு மருத்துவமனையில் சசிகலா அனுமதிக்கப்பட்டார். அங்கு பரிசோதனை மேற்கொண்டதில் அவருக்கு ரத்தக்கொதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. காய்ச்சல், மூச்சுத் திணறல் குறைந்திருக்கும் நிலையில் அவருக்கு கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டது. இது தொடர்பாக புதிய தலைமுறையிடம் தகவல்களை பகிர்ந்து கொண்ட அவரது வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன், ஒரு வாரமாகவே சசிகலாவுக்கு வைரஸ் காய்ச்சலுக்கு சிறையில் சிகிச்சை பெற்று வந்ததாக தெரிவித்துள்ளார். சசிகலாவுக்கு ஆக்சிஜன் அளவு குறைந்ததாக தமக்கு தகவல் கிடைத்திருப்பதாகவும் அவர் கூறினார்.
இதுகுறித்து சசிகலாவுக்கு சிகிச்சை அளித்துவரும் மருத்துவர் கூறுகையில், மூச்சுத்திணறல் உள்ளதால் ஆக்ஸிஜன் அளிக்கப்படுகிறது. ஆனால் காய்ச்சல் தற்போது இல்லை. ஆக்ஸிஜன் அளவு 79% இருந்ததால் தற்போது ஆக்ஸிஜன் அளிக்கப்பட்டு வருகிறது என சிகிச்சையளித்து தெரிவித்திருக்கிறார். சர்க்கரை நோய், தைராய்டு, இருமல், காய்ச்சலுடன் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார் எனவும், சிகிச்சைக்குப்பின் அவர் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.
மேலும் அவர் தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளதாகவும், ரேபிட் பரிசோதனையில் நெகடிவ் என வந்தாலும், ஆர்டி- பிசிஆர் முடிவுக்காக காத்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது.