தமிழ்நாடு

மதுரை: கட்டாத வீட்டை தூய்மையாக வைக்க வேண்டும் என வந்த குறுஞ்செய்தியால் பயனாளிகள் அதிர்ச்சி

kaleelrahman

'ரசீது இருக்கு கெணத்த காணோம்' என்னும் வடிவேலு பாணியில், கட்டாத வீட்டை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என வீட்டுவசதி வாரியம் குறுஞ்செய்தி அனுப்பியதால் பயனாளிகள் அதிர்ச்சியடைந்தனர்.

மதுரை திருப்பரங்குன்றம் காட்டுநாயக்கர் தெரு பகுதியில் 20 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வந்த 500-க்கும் மேற்பட்ட வீடுகள், ஆக்கிரமிப்பில் இருப்பதாகக்கூறி மாவட்ட நிர்வாகம் குடியிருப்புகளை அகற்றியுள்ளது.

இதனையடுத்து அந்த பகுதியில் வசித்த குடியிருப்பு வாசிகளுக்கு மதுரை தோப்பூர் உச்சப்பட்டி பகுதியில் சேட்டிலைட் சிட்டி திட்டத்தில் குடிசை மாற்று வாரியத்தின் கீழ் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்படுவதாகக்கூறி 600-க்கும் மேற்பட்டோருக்கு, கடந்த ஜூலை 2016-ஆம் ஆண்டு, வீடு ஒதுக்கீடு மற்றும் பிரதம மந்திரி ஆவாஜ் யோசனா திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்காக 2 லட்சத்தி 10 ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கான ஆணையும் வழங்கப்பட்டுள்ளது.

ஒதுக்கீடு ஆணை பெற்ற நிலையிலும் உரிய இடத்தை ஒப்படைக்காமல் இருந்த நிலையில் 2020-ஆம் ஆண்டு பயனாளிகளுக்கு பிரதம மந்திரி நகர்புற வீட்டு வசதி வாரியத்தின் சார்பில் வீட்டை பெற்றமைக்கு வாழ்த்துகள் எனக்கூறி கடிதம் வந்துள்ளது. வீட்டிற்கான இடமே வழங்காத நிலையில், வீடு கட்டப்படாததற்கு வாழ்த்துகள் என வந்த கடிதம் பயனாளிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் வீட்டின் முன்பாக மரக்கன்றுகளை நட வேண்டும், வீட்டை தூய்மையாக வைத்து அரசின் விதிப்படி பராமரித்தால் மத்திய அரசின் சார்பில் பரிசு வழங்கப்படும் எனவும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. இது குறித்து பயனாளிகள் குடிசை மாற்றுவாரிய அலுவலக அதிகாரிகளிடம் முறையிட்டபோது ஒதுக்கீடு ஆணை வழங்கியதற்கான திட்டம் கைவிடப்பட்டதாகவும், தனி வீடுகளுக்கு பதிலாக அதே பகுதியில் அடுக்குமாடி வீடு கட்டிதருவதற்கான பணிகள் நடைபெறுவதாகவும் பதில் அளித்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பயனாளிகள் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.