Beer bottle
Beer bottle pt desk
தமிழ்நாடு

சாலையில் கவிழ்ந்த பீர் பாட்டில்கள்.. மூட்டை மூட்டையாக அள்ளிச்சென்ற மதுப்பிரியர்கள்...

webteam

செங்கல்பட்டு மாவட்டம் வையாவூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பீர் உற்பத்தி ஆலையில் இருந்து, கடலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மதுபான சேமிப்பு கிடங்கிற்கு 1500 பெட்டிகளில் 18,000 பீர் பாட்டில்களை ஏற்றிக் கொண்டு கனரக லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், மதுராந்தகம் அருகில் உள்ள பாக்கம் பகுதியில் ஆம்னி பேருந்து ஒன்று, திடீரென இந்த லாரியை முந்திச் செல்ல முயன்றது.

lotty

அப்போது பேருந்து மீது மோதாமல் இருக்க லாரி ஓட்டுநர் வாகனத்தை இடதுபக்கம் திருப்பியுள்ளார். இதனால் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் பீர் பாட்டில்கள் பள்ளத்தில் சரிந்து விழுந்தன. இதையறிந்து அங்கு கூடிய சுற்று வட்டாரத்தில் உள்ள மதுகுடிப்போர் பீர் பாட்டில்களை எடுத்துள்ளனர். விரைவாக வந்த மதுராந்தகம் காவல்துறையினர், மேற்கொண்டு பீர் பாட்டில்களை யாரும் எடுத்துவிடாமல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

பின்பு மதுபான ஆலையில் இருந்து ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு வேறொரு லாரியில் மது பாட்டில்களை ஏற்றிக் கொண்டிருந்தனர். போலீஸ் பாதுகாப்பு இருந்தும் மது குடிப்போர் பீர் பாட்டில்களை அள்ளிச் சென்று விட்டு மீண்டும் வந்து வந்து எடுத்துச் சென்றனர். பெட்டிகள் சேதமடைந்து தண்ணீரில் மூழ்கிய பீர் பாட்டில்களை ஊழியர்கள் எடுக்காமல் விட்டனர்.

Beer bottle

இதனால் நீண்ட நேரமாக அங்கு கூடியிருந்த சுற்று வட்டார கிராமத்திலிருந்து வந்தவர்கள், தயாராக வைத்திருந்த கோணி பைகளில் முண்டியடித்துக் கொண்டு தண்ணீரில் மீன்பிடிப்பது போல் மது பாட்டில்களை தடவி தடவி மூட்டை மூட்டையாக எடுத்துச் சென்றனர். சிலர் அணிந்திருந்த சட்டை மற்றும் லுங்கியை கழட்டி பீர் பாட்டில்களை தூக்கிச் சென்றனர். அவர்களின் இச்செயல் முகம் சுளிக்க வகையில் இருந்தநிலையில், பல்வேறு விமர்சனங்களையும் பெற்றுவருகிறது.