தமிழ்நாடு

தகாத உறவு பிரச்னையில் பியூட்டி பார்லர் பெண் கொலை - பரிதவிக்கும் குழந்தைகள்

rajakannan

திருச்செங்கோடு அருகில் பியூட்டி பார்லரில் பணிபுரியும் பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவத்தில், அவருடன் தகாத உறவு வைத்திருந்ததாக கூறப்படும் நபர்தான் கொலையாளி என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள இறையமங்கலம் பகுதியில் வசித்து வருபவர் செந்தில். இவரது மனைவி வனிதா என்கின்ற சோபனா. இவர் திருச்செங்கோட்டில் உள்ள சுபானா என்ற பியூட்டி பார்லரில் உதவியாளராக கடந்த 10 ஆண்டுகளாக பணி செய்து வருகிறார். 29 வயதான இவருக்கு ஆறாம் வகுப்பு பயிலும் தேவா மற்றும் எல்கேஜி பயிலும் சச்சின் என்ற இரு மகன்கள் உள்ளனர். 

கடந்த 19ம்தேதி காலை வேலைக்கு சென்ற இவர், தனது மகன் தேவாவின் பிறந்தநாளுக்கு துணிகளை வாங்கியுள்ளார். பின்னர், ஊருக்கு வரும் கடைசி பேருந்தை விட்டு விட்டதாகவும் ஆகையால் தனக்கு தெரிந்த ஒருவருடைய காரில் வருவதாகவும் இரவு 8 மணிக்கு வீட்டுக்கு தகவல் கூறியுள்ளார். நீண்ட நேரமாகியும் சோபனா வராத காரணத்தால் அக்கம் பக்கம் உள்ள வீடுகளிலும் உறவினர் வீடுகளிலும் விசாரித்து விட்டு 20ம் தேதி காலை மொளசி காவல் நிலையத்தில் கணவர் செந்தில் புகார் செய்தார். 

இதனையடுத்து, திருச்செங்கோடு அருகே உள்ள புள்ளிபாளையம் பகுதியில் ஒரு குட்டையில் சடலம் ஒன்று இருப்பதாக வந்த தகவலை அடுத்து மொளசி போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். 

விசாரணையில் அது வனிதாவின் சடலம் என்பது தெரியவந்தது. இவர் சடலமாக கண்டெடுக்கப்பட்ட இடத்தின் அருகே உள்ள குச்சிக்கிழங்கு காட்டில் மகனுக்கு வாங்கிய துணிகள் மற்றும் சாக்லேட்டுகள் இருந்துள்ளது. இவரது கைப்பை விட்டம்பாளையம் பகுதியில் சாலையோரத்தில் கண்டெடுக்கப்பட்டது. இந்த பொருட்களை கைப்பற்றிய போலீசார் ஷோபனா கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணையை தொடங்கி நடத்திவந்தனர்.

மொளசி காவல் துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவர் அணிந்திருந்த நகைகள் ஏதும் திருடப்படவில்லை, எனவே பணம் நகைக்காக இவர் கொலை நடக்கவில்லை என்ற எண்ணத்திற்கு போலீசார் வந்தனர். 

பிரேத பரிசோதனையில் சோபனா பாலியல் பலாத்காரம் செய்யப்படவில்லை என்பதும், கழுத்தை நெறித்து கொல்லப்பட்டிருப்பதும் தெரிய வந்தது. இதன் அடிப்டையில் போலீசார் நடத்திய விசாரணையில் தான் வேலை பார்த்து வரும் கட்டிடத்தில் மற்றொரு அலுவலகம் வைத்தள்ள சுரேஷ் குமாருடன் சோபனா இருசக்கர வாகனத்தில் சென்றது தெரியவந்தது. 

மேலும், சோபனாவின் செல்போனுக்கு வந்த அழைப்புகளை வைத்தும் போலீசார் நடத்திய விசாரனையில் சுரேஸ்குமாருடன் சோபனா தொடர்ந்த பேசி உள்ளதும் தெரிய வந்தது. சந்தேகத்தின் அடிப்படையில் சுரேஷ்குமாரை பிடித்து விசாரித்ததில் அதிர்ச்சியான தகவல்கள் வெளியானது. 

அந்த வாக்குமூலத்தில், “ஆபத்து காத்த விநாயகர் கோவில் அருகில் உள்ள கட்டிடத்தில் சோபனா வேலை செய்த பியூட்டி பார்லர் உள்ளது. அதே கட்டிடத்தின் மேல்மாடியில் எனது அலுவலகம் உள்ளது. அங்கு வந்து செல்லும் போது எனக்கும் சோபனாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த தொடர்பு கடந்த ஆறுமாதமாக நீடித்து வந்தது. இருவரும் மனம் விட்டு பேசி மட்டுமே வந்தோம். இதே வேலையில்நான் வேறு சில பெண்களிடம் பேசி வந்தது பிடிக்காமல் சோபனா தகராறு செய்து வந்தார். 

இந்த நிலையில் கடந்த 19ம் தேதி அவரது ஊருக்கு செல்லும் கடைசி பஸ்சை தவற விட்டு விட்டதாகவும் தன்னை இறையமங்கலத்தில் இறக்கி விடும் படியும் கேட்டார். எனது எனது பைக்கில் சோபனாவை அழைத்து சென்று கொண்டிருந்தேன். வழியில் சோபனா வேறு பெண்களுடன் நான் பேசக்கூடாது என்னிடம் மட்டும் தான் பேச வேண்டும் என வாக்குவாதம் செய்து வந்தார். 

விட்டம்பாளையம் புள்ளிபாளையம் பகுதியில் வாக்குவாதம் முற்றவே வண்டியை நிறுத்தி விட்டு இறங்கிய நான், நீ என்ன தாலி கட்டிய மனைவியா? என கேட்டேன். இதில், கோபமடைந்த சோபனா என் கழுத்தை நெறித்து சண்டை போட்டார். என் கழுத்தை நெறித்த சோபனாவின் கழுத்தை நானும் பலமாக நெறித்தேன். இதில் சோபனா எதிர்பாராத விதமாக இறந்து விட்டார். போலீசில் சி்க்காமல் இருக்க அவரது சடலத்தை அருகில் இருந்த குட்டையில் போட்டுவிட்டு வந்து விட்டேன்” என கூறியுள்ளார். 

கைது செய்யப்பட்ட சுரேஷ்குமாரை நீதிமன்றத்தில் போலீசார்  ஆஜர்படுத்தினர். கொலையாளி சுரேஷ்குமாருக்கு கோமதி என்ற மனைவியும் 4ம் வகுப்பு மற்றும் 1ம்வகுப்பு படிக்கும் இரண்டு மகன்கள் உள்ளனர். கொன்றவருக்கும் கொலையுண்டவருக்கும் குடும்பம் குழந்தைகள் என இருந்தும் தகாத உறவால் இரு குடும்பங்களும் பரிதவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது