தமிழ்நாடு

‘செய்வினை’ எடுப்பதாக கூறி பண மோசடி - பி.இ பட்டதாரிகள் கைது

webteam

திருப்பூரில் செய்வினை எடுக்கப்படும் எனக் கூறி மக்களிடம் பணம் பெற்று ஏமாற்றி வந்த இருவரை போலீஸார் கைது செய்தனர்.

திருப்பூரில் உள்ள தனியார் பனியன் நிறுவனம் எதிரில் வசித்து வருபவர் மகேஸ்வரன் (வயது 35). இவருக்கு இரு குழந்தைகள் உள்ளனர். இவர்கள் வசித்து வந்த வீட்டிற்கு இரு வாலிபர்கள் வந்துள்ளனர். அவர்கள் தங்களை மாந்திரிகம் மற்றும் ஜோதிடம் தெரிந்தவர்கள் எனக்கூறி அறிமுகப்படுத்திக் கொண்டனர். அத்துடன் மகேஸ்வரனிடம், “உங்கள் குழந்தைக்கு யாரோ செய்வினை செய்துள்ளனர். அதனை எடுக்க வேண்டும் என்றால் 4500 ரூபாய் செலவாகும். செலவு செய்தால் வழிபாடு மூலம் செய்து செய்வினையை நீக்கி விடலாம்” என கூறியுள்ளனர். 

சந்தேகமடைந்த மகேஸ்வரன் ஊரக போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் இரு வாலிபர்களையும் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர்கள் தஞ்சையை சேர்ந்த பாலாஜி (24) மற்றும் திருவாரூரை சேர்ந்த மகாபிரபு (23) என்பது தெரியவந்தது. 

இருவரும் திருப்பூரில் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வீட்டில் உள்ளவர்களிடம் ‘ஜோதிடம் தெரியும், செய்வினை எடுக்கப்படும்’ எனக் கூறி ஏமாற்றி பணம் பறித்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இருவரும் பொறியியல் படித்த பட்டதாரி வாலிபர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் இருவரையும் கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.