madurai tanishq showroom heist issue pt / meenakshi_nachiyar@instagram
தமிழ்நாடு

’தைரியமா இரு, பயப்படாத.. நாங்க இருக்கோம்’ - யூடியூபர் மீனாட்சிக்கு ஆறுதல் சொன்ன குடும்பத்தினர்!

தனிஷ்க் நகைக் கடை கொள்ளை வழக்கில் மீனாட்சி கைது: சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ

PT WEB

மதுரை தனிஷ்க் நகைக்கடையில் நடந்த கொள்ளை வழக்கில் யூடியூபர் மீனாட்சி கைது செய்யப்பட்டார். நீதிமன்றத்தில் ஆஜராகும் போது, தாய் மற்றும் நண்பர் 'தைரியமா இரு, பயப்படாத நாங்க இருக்கோம்' என்று ஆறுதல் கூறிய வீடியோ வைரலாகி சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர் - M.மீரா

மதுரை தனிஷ்க் நகைக் கடை கொள்ளை வழக்கில் இன்ஸ்டாகிராம்/ யூடியூப் பிரபலம் மீனாட்சி நாச்சியார் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை நீதிபதி முன் ஆஜர்படுத்த அழைத்துச் செல்லப்பட்டபோது மீனாட்சியின் தயார் மற்றும் அவரது நண்பர் தைரியமா இரு, பயப்படாத, நாங்க எல்லோரும் இருக்கோம் என்று ஆறுதல் கூறிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. மேலும் நீதிபதியிடம் என்ன நடந்ததோ அதைச் சொல்லு என்று கூறிய வார்த்தைகளும் அந்த வீடியோவில் பதிவாகியிருக்கிறது.

கைதின் பின்னணி

மதுரை பைபாஸ் சாலையில் உள்ள தனிஷ்க் நகைக்கடையில் கடந்த நவம்பர் 12-ஆம் தேதி சுமார் 15 கிலோ தங்க நகைகள் மற்றும் 3 கிலோ வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்தச் சம்பவம் தொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதலில் நகைக்கடையில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போலீஸார், கொள்ளையில் ஈடுபட்டது யூடியூபர் நிஷாந்த் என்பதை கண்டறிந்ததாகக் கூறப்படுகிறது. கடைக்கு வாடிக்கையாளர் போல அடிக்கடி வந்து நகைகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை அவர் நோட்டமிட்டுச் சென்றுள்ளார்.

கொள்ளையின்போது முகமூடி அணிந்திருந்த நபரின் கையில் இருந்த டாட்டூவை போலீஸார் முக்கிய அடையாளமாகக் கொண்டனர். முன்னதாக கடைக்கு வந்தபோது கையில் கட்டுடன் இருந்த நிஷாந்த், மற்றொரு முறை தொப்பி அணிந்து வந்த காட்சிகளையும் ஒப்பிட்டுப் பார்த்தனர். மூன்று காட்சிகளிலும் ஒரே மாதிரியான டாட்டூ இருந்ததால் கொள்ளையில் ஈடுபட்டது நிஷாந்த் என்பதை உறுதி செய்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதையடுத்து, நிஷாந்த் யாருடன் தொடர்பில் இருந்தார் என்பதைத் தொழில்நுட்ப உதவியுடன் ஆய்வு செய்த போலீஸார், அவரது தோழியும் இன்ஸ்டாகிராம் பிரபலமுமான மீனாட்சி மற்றும் அவரது தந்தை சுரேஷ் ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து சுமார் 5 கிலோ தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

meenakshi

விசாரணையில், புதிய வீடு கட்டி வந்த மீனாட்சிக்கு அதிக பணம் தேவைப்பட்டதாகவும், கடன் சுமையால் அவர் நிஷாந்திடம் உதவி கேட்டதாகவும் தெரியவந்துள்ளது. இதையடுத்தே இருவரும் நகைக்கடையில் கொள்ளையடிக்கத் திட்டமிட்டதாகக் கூறப்படுகிறது. கொள்ளைக்கு பயன்படுத்துவதற்காக மீனாட்சி தனது இருசக்கர வாகனத்தையும் நிஷாந்திடம் கொடுத்துள்ளார்.

மேலும், கொள்ளையடிக்கப்பட்ட நகைகளில் சிலவற்றை நிஷாந்துக்குச் சொந்தமான இடத்தில் பதுக்கி வைத்திருந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

meenakshi

இதற்கிடையே, கைது செய்யப்பட்ட மீனாட்சி மற்றும் சுரேஷ் ஆகிய இருவரையும் போலீஸார் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவப் பரிசோதனை செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தலைமறைவாக உள்ள நிஷாந்தைத் தேடும் பணியில் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கொள்ளையடிக்கப்பட்ட மீதமுள்ள நகைகளையும் மீட்க விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.