தமிழ்நாடு

ராமநாதபுரம்: ஓபிஎஸ் உடன் ஈபிஎஸ்-க்கு எதிராக பேசியதற்காக நீக்கப்பட்ட பஷீர் சந்திப்பு

kaleelrahman

அதிமுகவில் இருந்து எடப்பாடி பழனிசாமியை நீக்க வேண்டும் என்று கூறியதால் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அதிமுக நிர்வாக பஷீர் இன்று ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்தார்.

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் உள்ள முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் மலர்தூவி மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

அதன் பின்னர் ஒ.பன்னீர்செல்வம் தனது வாகனத்திற்குச் செல்லும்போது, சமீபத்தில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பஷீர் ஒ.பன்னீர்செல்வத்தின் காலில் விழுந்து அவரை சந்தித்து பேசினார். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பஷீர் உடன் நிர்வாகிகள் யாரும் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது என்று கூறி வந்த நிலையில், இன்று ஓபிஎஸ் சந்தித்துள்ளது விவாதத்தை உண்டாக்கியுள்ளது.

முன்னதாக, சென்னையில் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஜே.எம்.பஷீர், “சி.ஏ.ஏ சட்டம் அமல்படுத்தப்பட்டப் பிறகு அதிமுகவுக்கான வாக்குவங்கி சரிந்தது. சிறுபான்மையின மக்களுக்கு எதிரான சட்டம் வந்தபோது சட்டத்திற்கு ஆதரவாக முகம்மது ஜான் எம்.பியை எடப்பாடி பழனிசாமி வற்புறுத்தினார்.

எடப்பாடி பழனிசாமி எனும் தனிமனிதன் முதலமைச்சராக தொடர வேண்டும் என்பதற்காக முகம்மது ஜான் வாக்களித்தார். ஆனால் அவர் மறைவுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி ஆறுதல் கூட சொல்லவில்லை இன்றைக்கு வந்த திமுக அரசு சட்டமன்றத்தில் குடியுரிமை சட்டத்திருத்ததிற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். இஸ்லாமியர்களுக்கு அதிமுகவில் மரியாதை இல்லை. அதற்கு காரணம் எடப்பாடி பழனிசாமி தான். இஸ்லாமியர்களுக்கு எதிராக துரோகம் இழைத்தவர் எடப்பாடி பழனிசாமி” என்று குற்றம் சாட்டினார்.

எடப்பாடி பழனிசாமியை கட்சியை விட்டு நீக்க வேண்டும் என பேசியதற்காக பஷீர் அதிமுகவில் இருந்து உடனடியா நீக்கப்பட்டார். இந்த நிலையில்தான் ஓபிஎஸ் உடனான அவரது சந்திப்பு நிகழ்ந்துள்ளது.