தமிழ்நாடு

பொட்டல்காடாய் மாறிய புழல் ஏரி.. தாகத்தில் தவிக்கப்போகிறதா சென்னை?

பொட்டல்காடாய் மாறிய புழல் ஏரி.. தாகத்தில் தவிக்கப்போகிறதா சென்னை?

webteam

சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரியான புழல் 13 ஆண்டுகளுக்குப் பிறகு முற்றிலும் வறண்டு விட்டது. அதனால், சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.
வறண்டு பொட்டல் காடாய் காட்சியளிக்கிறது சென்னையின் குடிநீர் ஆதராமாக விளங்கிய புழல் ஏரி.  பல்லவர் ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்ட இந்த ஏரியின் மொத்த பரப்பளவு 5ஆயிரம் ஏக்கருக்கும் அதிகம். 35 அடி உயரம் கொண்ட இந்த ஏரியில் 3ஆயிரத்து 300 கன அடி தண்ணீரை சேமித்துவைக்க முடியும். சோழவரம், பூண்டி ஏரிகளிலிருந்து வரும் தண்ணீர் புழலில் சேகரிக்கப்பட்டு, குடிநீர் வடிகால் வாரியம் மூலம் சுத்திகரிக்கப்பட்டு சென்னை மக்களுக்கு குடிநீராக விநியோகிக்கப்படும். புழல் ஏரியிலிருந்து நாள் ஒன்றுக்கு ‌200 மில்லியன் லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டு, வடசென்னை முழுவதற்கும், மத்திய சென்னையின் ஒரு பகுதிக்கும் வழங்கப்படும். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த புழல் ஏரி, தற்போது பூஜ்ய மட்டத்திற்கு வந்துள்ளது.
2004ஆம் ஆண்டுக்குப் பிறகு, முதன் முறையாக புழல் ஏரி தண்ணீரின்றி வறண்டு விட்டதால் கேன், லாரிகளில் தண்ணீர் கிடைப்பதும் கேள்விக்குறியாகி உள்ளது. ஏரியை முறையாக தூர்வாரி பராமரிக்காததே இந்த நிலைக்கு காரணம் என மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். ஏரியை தூர்வாரியிருந்தால் 2015ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போதே தண்ணீரை சேமித்து வைத்திருக்க முடியும் என்றும் சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
புழல் ஏரி வறண்டாலும் சென்னையின் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்கும் வகையில், போரூர், வீராணம் ஏரிகளிலிருந்து தண்ணீர் விநியோகிக்கப்படுவதாக குடிநீர் வழங்கல் அதிகாரிகள் கூறுகின்றனர்.