சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து திருச்சியில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்காக வைக்கப்பட்ட பேனர்கள் அகற்றப்பட்டு வருகின்றன.
பெரும்பாலான பேனர்கள் அகற்றப்பட்ட நிலையில், நீதிமன்றம், ஆட்சியர் அலுவலகம், ஜி.கார்னர் மைதானம் உள்ளிட்ட இடங்களில் இன்று காலை முதல் பேனர்கள் அகற்றப்பட்டு வருகின்றன. சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி தொடர்ந்த வழக்கில், எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்காக அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
திருச்சியில் நடந்த எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை ஒட்டி அனுமதியை மீறி ஆயிரக்கணக்கான பேனர்கள் வைக்கப்பட்டன. திருச்சி விமான நிலையத்தில் இருந்து ஜி.கார்னர் மைதானம் வரையிலும், சுற்றுலா மாளிகையில் இருந்து ஜி.கார்னர் வரையிலும், திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து ஜி.கார்னர் வரையிலும், பல அடி உயர பேனர்கள் அணிவகுந்து வரிசையாக அணிவகுத்து நின்றன.
இந்நிலையில் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலை, தஞ்சை திருச்சி உள்ளிட்ட 10 கிலோமீட்டர் சுற்றளவுக்கு பேனர்களை அகற்றும் பணி தொடங்கியது. அரசு பேருந்துகளின் பின்புறம் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளையும், அனுமதியில்லாமல் வைக்கப்பட்ட தோரண வளைவுகளையும் அகற்றும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.