தமிழ்நாடு

அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்.. உடனே அகற்ற போலீஸ் உத்தரவு

webteam

மேலூர் அருகே அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள பேனரை, காவல்துறையினர் அகற்ற உத்தரவிட்டுள்ளனர்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 72-வது பிறந்தநாள், நாளை அதிமுகவினரால் கொண்டாடப்பட உள்ளது. இதற்காக அதிமுகவின் தொண்டர்கள் ஜெயலலிதாவின் புகைப்படம் பொருந்திய பேனர்களை ஆங்காங்கே வைத்துள்ளனர். ஆனால் இதில் சில பேனர்கள் விதிமுறைகளை மீறி வைக்கப்பட்டதாக தெரிகிறது.

கடந்த ஆண்டு விதிகளை மீறி சாலையில் வைக்கப்பட்ட பேனர் ஒன்றால், சுபஸ்ரீ என்ற இளம்பெண் உயிரிழந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அதன் பின்னர் சில மாதங்கள் விதிகளை மீறி பேனர்கள் வைப்பது தடுக்கப்பட்டது. ஆனால் தற்போது பேனர் கலாச்சாரம் மீண்டும் தொடங்கியிருக்கிறது.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள பகுதி கருங்காலக்குடி. இங்கு, ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு அப்பகுதியின் பேருந்து நிறுத்தம், சிங்கம்புணரி சாலை, கம்பூர் சாலை, புறநகர் காவல்நிலையம் என 4 இடங்களில் ஜெயலலிதாவின் புகைப்படம் பொருந்திய விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த பேனர்களை அதிமுக பிரமுகரும், மதுரை மாவட்ட கூட்டுறவுச் சங்க தலைவருமான ஜபார் வைத்திருந்தார்.

இந்த பேனர்கள் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் கொட்டாம்பட்டி காவல் துறைக்கு புகார் அளித்தனர். இதனையடுத்து அந்த பேனர்களை அகற்ற டிஎஸ்பி சுபாஷ் உத்தரவிட்டார். அதன்பேரில் பேனர் அகற்றப்பட்டது.