தமிழகத்தில் அதிகரித்துள்ள ஆணவ படுகொலைகளை கண்டித்தும், ஆணவக் கொலைகள் தடுப்பு சிறப்பு சட்டத்தை உடனே தமிழக அரசு நிறைவேற்றிட வலியுறுத்தியும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுவருகிறது.
ஆணவ படுகொலைகளை கண்டித்து பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு வருகை தந்த விசிக தலைவர் திருமாவளவனுக்கு வரவேற்பு வழங்கப்பட்டது. அப்போது தொல்.திருமாவளவானை வரவேற்று மண்டலத் துணைச் செயலாளர் லெனின் பெரம்பலூர் முக்கிய நகர் பகுதிகளில் *நாளைய முதல்வரே* என குறிப்பிட்டு வைக்கப்பட்ட பேனர்களால் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினரிடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
சமீபத்தில் எதிர்கட்சியினர் திருமாவளவனுக்கு முதல்வராகும் தகுதி இல்லையா என ஆதரவு குரல் எழுப்பிய நிலையில், பெரம்பலூர் பாலக்கரை, புதிய பேருந்து நிலையம், நான்கு ரோடு பகுதிகளில் உள்ள சாலைகள் தோறும் விசிகவினர் வைத்துள்ள இந்த பேனர் கட்சியினர் மட்டுமின்றி பொதுமக்களிடையேயும் பேசுபொருளாகி வருகிறது.