தமிழ்நாடு

கமல்ஹாசனுக்கு எதிரான வழக்கை விசாரிக்க தடை

webteam

நடிகர் கமல்ஹாசன் மகாபாரதம் பற்றி சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்தாக தொடரப்பட்ட வழக்கை விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை இடைக்காலத் தடை விதித்துள்ளது.

இது தொடர்பான வழக்கில் நேரில் ஆஜராக வேண்டும் என நெல்லை மாவட்டம் வள்ளியூர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் வழக்கை தள்ளுபடி செய்யக்கோரியும் வழக்கில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்கக் கோரியும் நடிகர் கமல்ஹாசன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இம்மனுவை விசாரித்த நீதிமன்றம், கமல்ஹாசனுக்கு எதிரான வழக்கை விசாரிக்க இடைக்காலத் தடைவிதித்ததுடன் அவர் நேரில் ஆஜராகத் தேவையில்லை என்றும் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, புதிய தலைமுறையின் அக்னிப் பரிட்சை நிகழ்ச்சியில், சினிமா, திராவிடம் எனப் பல்வேறு விஷயங்களை கமல்ஹாசன் பகிர்ந்து கொண்டார்.

அப்போது அவர், பெண்களை ஆதிக்கம் செலுத்தும் மனப்பான்மையில்தான் வாழ்ந்து வருகிறோம் என்றும், மகாபாரதத்தின் சூதாட்ட படலத்தை விட்டே நாம் வரவில்லை என்றும் கூறியிருந்தார். இது மகாபாரதத்தை இழிவு படுத்துவதாகக் கூறி மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.