நாடு முழுவதும் சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். இதனால் வங்கி சேவை முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பேங்க் ஆஃப் பரோடா வங்கியுடன் விஜயா வங்கி, தேனா வங்கிகளை இணைக்க மத்திய அரசு தீவிரமாக உள்ளது. இதற்கு வங்கி ஊழியர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுமட்டுமின்றி, 7-வது ஊதியக் குழு பரிந்துரையின்படி குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயம் செய்ய வேண்டும், மருத்துவக் காப்பீடு திட்டத்தை அமலாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமான வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். 9 அரசு மற்றும் தனியார் வங்கிகளின் சங்கங்களை சேர்ந்தவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதால் வங்கி சேவை முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஏற்கெனவே கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி நேற்று வங்கிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்து. இந்நிலையில் இன்றும் வங்கி சேவை முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் வாடிக்கையாளர்கள் கவலையில் உள்ளனர்.
வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டத்தால் நாடு முழுவதும் ஒரு லட்சம் கோடி ரூபாய் காசோலை பரிவர்த்தனையும், தமிழகத்தில் பத்தாயிரம் கோடி ரூபாய் காசோலை பரிவர்த்தனையும் முடங்கும் என்று வங்கி ஊழியர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர். முன்னதாக கடந்த 21-ஆம் தேதி இதே கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் ஒரு நாள் வேலைநிறுத்ததில் ஈடுபட்டனர்.