தமிழ்நாடு

’வேலை கிடைத்தால் உயிரை விடுவேன்’ - விபரீத நேர்த்திக்கடனால் பலியான வங்கி மேலாளர்.!

webteam

நாகர்கோவில் அருகே நேர்த்திக்கடனுக்காக இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் எள்ளுவிளை பகுதியை சேர்ந்தவர் நவீன் (32). இவருக்கு சிறு வயது முதலே கடவுள் பக்தி அதிகமாக இருந்து வந்துள்ளது. இவர் பொறியியல் படித்து முடித்த பின்னர் வேலைக்காக முயற்சித்து வந்துள்ளார். வங்கி தேர்வுகளும் எழுதிய நிலையில் அவருக்கு எந்த வேலையும் கிடைக்கவில்லை. இதனால் தனக்கு வேலை கிடைத்தால் தன் உயிரை காணிக்கையாக தந்து நேர்த்தி கடனை செலுத்துவதாக வேண்டியுள்ளார்.

இந்நிலையில் பல ஆண்டுகளாக கிடைக்காத வேலை தற்போது கிடைத்துள்ளது. வங்கி உதவி மேலாளராக கடந்த 15 நாட்களுக்கு முன் மும்பையில் உள்ள பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் பணியில் அமர்ந்தார். வேலைக்கு சேர்ந்து 15 நாட்களுக்கு பின்னர் நேற்று மும்பையில் இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்துள்ளார் நவீன். பின்னர் அங்கிருந்து மார்த்தாண்டத்தில் உள்ள தனது நண்பரையும் பார்த்து பேசிவிட்டு தனது சகோதரரிடம் தான் ஊருக்கு வந்துள்ளதாகவும் தொலைபேசியில் கூறியுள்ளார். இதையடுத்து நாகர்கோவில் வந்த அவர், புத்தேரி பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த ரயில்வே போலீசார் உடலை மீட்டு கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் விசாரணையில் அவரிடம் இருந்து கடிதம் ஒன்று கிடைத்தது. அதில், தனது தற்கொலைக்கான காரணத்தை குறிப்பிட்டிருந்தார். இதைப்பார்த்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

வேலைகிடைக்காத விரக்தியல் முட்டாள் தனமாக தற்கொலை செய்யும் நபர்கள் மத்தியில், வேலைக்கிடைத்தும், நேர்த்திக்கடனாக உயிரை கொடுத்த இளைஞரின் முடிவு மூட நம்பிக்கையின் உச்சமாக உள்ளது.

 தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - +91 44 2464 0050, +91 44 2464 0060