புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் பாரத ஸ்டேட் வங்கியில் சுமார் 5 கோடி ரூபாய் மோசடி செய்த வங்கி மேலாளர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
2015-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை ஆலங்குடி பாரத ஸ்டேட் வங்கியில் கிரன்பாபு என்பவர் மேலாளராக பணியாற்றி வந்தார். இவர் பண மதிப்பு நீக்க நடவடிக்கையின் போது பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றுவதில் கோடிக்கணக்கில் மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அதுமட்டுமல்லாமல், விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோருக்கு கடன் வழங்க கமிஷன் கேட்டதாகவும் புகார் எழுந்தது.
இதையடுத்து கடந்த மே மாதம் வங்கி நிர்வாகம் கிரன்பாவுவை பணி நீக்கம் செய்தது. வங்கி நிர்வாகம் நடத்திய ஆய்வில் 4 கோடியே 95 லட்சம் ரூபாயை கிரன்பாபு மோசடி செய்திருப்பது தெரியவந்ததால், சிபிஐ-யிடம் புகார் அளித்தது. மோசடி பணத்தை மனைவி நிஷபா-வின் வங்கிக் கணக்கில் பரிமாற்றம் செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
விவசாயிகள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கவேண்டிய வங்கிக் கடனில் வங்கி மேலாளர் ஒருவர் 4.95 கோடி ரூபாய் மோசடி செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.