தமிழ்நாடு

தருமபுரம் ஆதீன பட்டணப் பிரவேசம் - தடையை நீக்கி மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் உத்தரவு

Sinekadhara

தருமபுரம் ஆதீன பட்டணப் பிரவேசத்திற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டிருப்பதாக மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் பழமைவாய்ந்த தருமபுரம் ஆதீனத் திருமடம் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆதீனகுரு முதல்வரின் குருபூஜை தினத்தன்று பட்டணப் பிரவேசம் என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டு அதில் ஆதீன கர்த்தரை பல்லக்கில் அமர்த்தி பக்தர்கள் சுமந்து வீதியுலா செல்வது வழக்கம். மனிதனை மனிதன் சுமக்கும் இந்த பட்டினப்பிரவேசம் பல்லக்குத் தூக்கும் நிகழ்வுக்கு திராவிடர் கழகம் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தது.

தருமபுரம் ஆதீன திருமடத்தில் ஆதீன குருமுதல்வர் குருபூஜையையொட்டி வருகின்ற 22-ஆம் தேதி நடைபெறவுள்ள பட்டணப் பிரவேச நிகழ்வில் ஆதின குருமகா சந்நிதானத்தை பல்லக்கில் அமர்த்தி மனிதர்கள் சுமந்து செல்ல தடை விதித்து மயிலாடுதுறை கோட்டாட்சியர் பாலாஜி கடந்த மாதம் 27-ஆம் தேதி உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் தற்போது தருமபுரம் ஆதீனகர்த்தரை பல்லக்கில் வைத்து மனிதர்கள் தூக்கிச்செல்வதற்கு பிறப்பித்த தடை விலக்கிக்கொள்ளப்படுவதாக கோட்டாட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.