நெகிழி பொருட்கள் மீதான தடை உத்தரவை முதற்கட்டமாக முதல்வர் மு.க.ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் அமல்படுத்தி, அதன் அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் நெகிழி பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டது செல்லும் என அளிக்கப்பட்ட தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரும் மனு நீதிபதிகள் எஸ் வைத்தியநாதன், பி.டி. ஆஷா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மற்ற மாநிலங்களிலிருந்து நெகிழி பொருட்கள் தமிழகத்திற்குள் அனுமதிக்கப்படுவதாக நெகிழி உற்பத்தியாளர்கள் தரப்பில் தெரிவிக்கபட்டது. அப்போது நீதிபதிகள் நெகிழி மீதான தடை உத்தரவை அமல்படுத்துவது என்றால் உற்பத்தி நிலையிலேயே தடுப்பதுடன், பிற மாநிலங்களிலிருந்து வருவதையும் தடுக்க வேண்டுமென அறிவுறுத்தினர்.
பெரும்பாலான கடைகளில் பொருட்களை எடுத்துச் செல்ல நெகிழி பைகள் இலவசமாக கொடுக்கப்படுவதாகவும், ஆனால் மாற்று பொருட்களால் ஆன பைகளுக்கு அதன் மதிப்பைவிட கூடுதலான தொகை வசூலிக்கப்படுவதாகவும் நீதிபதிகள் குற்றம்சாட்டினர். அப்போது தமிழக அரசு சார்பில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் நீதிமன்றத்தில் எடுத்துரைக்கப்பட்டன. நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுகளை அமல்படுத்த தயாராக இருப்பதாகவும் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. குறிப்பிட்ட ஒரு பகுதியை எடுத்துக் கொண்டு அதில் நெகிழி தடை பொருட்கள் மீதான உத்தரவை அமல்படுத்தலாம் என நீதிபதிகள் யோசனை தெரிவித்தனர்.
அதன்படி முதல்படியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை கொளத்தூர் தொகுதியில், தடை செய்யப்பட்ட நெகிழி பொருட்கள் மீதான தடை உத்தரவை அமல்படுத்த உத்தரவிட்ட நீதிபதிகள், அதுதொடர்பான அறிக்கையை மூன்று வாரங்கள் கழித்து தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை மார்ச் 24ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.