தமிழ்நாடு

"பதவி விலகச் சொல்லி மிரட்டுறாங்க".. காரைக்குடி அருகே ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் புகார்

webteam

காரைக்குடி அருகே வேங்காவயல் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் 3 பேரை பதவி விலகச் சொல்லி மிரட்டுவதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே வேங்காவயல் ஊராட்சிக்கு உட்பட்ட வளையல்வயல் கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளி மற்றும் ஊராட்சி மன்ற அலுவலகம் உள்ளது. இதன் எதிரேயுள்ள குளத்தின் கரையில், இளைஞர்கள் அமர்ந்து கொண்டு மது அருந்துவதோடு குளிக்க வரும் பெண்களை கிண்டல் செய்வதாகவும் கூறி, நேற்று நடந்த கிராம சபை கூட்டத்தில், குளத்தின் கரையில் அமர தடை விதித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த தீர்மானத்தை நிறைவேற்ற காரணமாக இருந்த ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ராக்கம்மாள், ஐந்தாவது வார்டு உறுப்பினர் பாண்டி, ஆறாவது வார்டு உறுப்பினர் மோகனா ஆகிய மூவரையும் ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் கருப்பையா என்பவர் பதவி விலகச் சொல்லி மிரட்டுவதாக சம்பந்தப்பட்ட உறுப்பினர்கள் காரைக்குடி காவல்துறை கண்காணிப்பாளர் வினோஜியை சந்தித்து புகார் மனு அளித்தனர்.

இதையடுத்து புகாரை பெற்றுக் கொண்ட காவல் துணை கண்காணிப்பாளர்விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.