புதுச்சேரி தனியார் மருத்துவ கல்லூரி மாணவர்கள் 778 பேரை நீக்கி இந்திய மருத்துவ கவுன்சில் பிறப்பித்த உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
புதுச்சேரியில் நான்கு நிகர்நிலை மருத்துவ பல்கலைக் கழகங்கள், மூன்று தனியார் மருத்துவக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. கடந்த 2016-17 கல்வியாண்டில் இக்கல்லூரிகளில் மொத்தம் 1,050 எம்.பி.பி.எஸ் இடங்கள் இருந்தன. தனியார் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களையும் ‘நீட்’ தேர்வு அடிப்படையில் சென்டாக் கலந்தாய்வு மூலமே நிரப்பப்பட வேண்டும் என்று இந்திய மருத்துவக் கவுன்சில் உத்தரவு பிறப்பித்திருந்தது. செண்டாக் என்பது மாணவர்களை தேர்வு செய்யும் புதுவை உயர் கல்வி மாணவர் தேர்வு அமைப்பு ஆகும்.
கடந்த ஆண்டு மாநில இட ஒதுக்கீட்டில் சேர்வதற்காக நீட் தேர்விலிருந்து புதுச்சேரி அரசு விலக்கு பெற்றிருந்தது. அதன்படி தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இருந்து அரசு ஒதுக்கீடாகப் பெறப்பட்ட 283 எம்.பி.பி.எஸ் இடங்கள் மட்டும் +2 மதிப்பெண் அடிப்படையில் நிரப்பப்பட்டது. ஆனால், தனியார் நிகர் நிலைப் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் இருந்த 778 இடங்களை ’நீட்’ தேர்வு மதிப்பெண் அடிப்படையில் செண்டாக் கலந்தாய்வு மூலம் நிரப்பாததுடன், மாணவர் சேர்க்கை 30.01.2016-க்குள் முடிக்கப்பட வேண்டும் என்ற இந்திய மருத்துவக் கவுன்சிலின் உத்தரவையும் மீறி மாணவர்கள் சேர்க்கப்பட்டனர்.
இதனையடுத்து, புதுச்சேரி தனியார் மருத்துவக் கல்லூரிகளில் கடந்த ஆண்டு எம்.பி.பி.எஸ் படிப்புக்கு செண்டாக் மூலம் சேர்க்கப்பட்ட 778 மாணவர்களை வெளியேற்றும்படி இந்திய மருத்துவ கவுன்சில் கடந்த 7-ம் தேதி அதிரடியாக உத்தரவிட்டது. பின்னர், இந்திய மருத்துவ கவுன்சிலின் இந்த உத்தரவை எதிர்த்து 778 மாணவர்களில் 108 பேர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், மருத்துவ மாணவர்கள் 778 பேரை வெளியேற்ற அக்டோபர் 23-ம் தேதி வரை இடைக்கால தடை விதித்து இன்று உத்தரவிட்டுள்ளது. மேலும், இது தொடர்பாக 2 வாரத்தில் மத்திய அரசு, புதுச்சேரி அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.