தமிழ்நாடு

பாலகிருஷ்ண ரெட்டி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

பாலகிருஷ்ண ரெட்டி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

Rasus

பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்த வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து பாலகிருஷ்ண ரெட்டி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

1998-ஆம் ஆண்டு கிருஷ்ணகிரியில் கள்ளச்சாராய விற்பனைக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். கோவிந்த ரெட்டி என்பவர் தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தின் போது போலீசார் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தப் போராட்டத்தில் பாலகிருஷ்ண ரெட்டியும் கலந்து கொண்டார்.

போராட்டத்தில் நடைபெற்ற வன்முறை தொடர்பாக பாலகிருஷ்ண ரெட்டி உள்ளிட்ட 108 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்கை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றம் இந்த வழக்கில் கடந்த ஜனவரி 7-ஆம் தேதி தீர்ப்பு அளித்தது. முதல் குற்றவாளி கோவிந்த ரெட்டிக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் பாலகிருஷ்ண ரெட்டி உள்ளிட்ட 12 பேருக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.

இந்தத் தீர்ப்பால், தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பாலகிருஷ்ண ரெட்டி, தீர்ப்புக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இதனை விசாரித்த உயர்நீதிமன்றம், பாலகிருஷ்ண ரெட்டிக்கு வழங்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்ய மறுப்பு தெரிவித்துவிட்டது. இந்நிலையில் பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்த வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து பாலகிருஷ்ண ரெட்டி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.