கொரோனா அச்சம் காரணமாக சென்னையில், பக்ரீத் கொண்டாட்டங்கள் களையிழந்துள்ளன.
இஸ்லாமியர்களின் மிக முக்கிய பண்டிகையாக உள்ள பக்ரீத் பண்டிகை இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. கொரோனா பரவல் காரணமாக, ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், நாடு முழுவதும் பரவலாக பக்ரீத் கொண்டாட்டங்கள் தடைபட்டுள்ளன.
தியாகத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சென்னை நகரில் உள்ள இஸ்லாமியர்கள் அவரவர் வீடுகளிலேயே தொழுகை நடத்தி, புத்தாடை அணிந்து, ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டு பக்ரீத் பண்டிகையை கொண்டாடினர். ஊரடங்கு அமலில் உள்ளதால், நகரில் உள்ள திருவல்லிக்கேணி பெரிய மசூதி, ஐஸ் ஹவுஸ் மசூதி, ராயப்பேட்டை மசூதி, மண்ணடி உள்ளிட்ட அனைத்து மசூதிகளும் முழுமையாக மூடப்பட்டு, மசூதிகள் முன்பாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஊரடங்கால் வழக்கமான நடைமுறையில் பக்ரீத் பண்டிகையை கொண்டாட முடியவில்லை என்றாலும், வீடுகளில் இருந்தவாறே கொண்டாடி, பண்டிகையின் முக்கிய நோக்கமான ஈகையை வலியுறுத்தும் வகையில் ஏழை, எளியவர்களுக்கு உணவு வழங்கி வருவதாக இஸ்லாமியர்கள் தெரிவித்தனர்.