நீயா நானா விவாத நிகழ்ச்சியில் தெருநாய்களுக்கு ஆதரவாக படவா கோபி பேசியது இணையத்தில் மோசமாக விமர்சிக்கப்பட்டுவரும் நிலையில், தன்னுடைய கருத்து யாரும் புண்படுத்தும் எண்ணத்தில் தெரிவிக்கப்படவில்லை என்றும், அது யாருடைய மனதையும் புண்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் படவா கோபி வீடியோ வெளியிட்டு பேசியுள்ளார்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் மிக மோசமாக தெரு நாய்கள் தாக்கும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அதிகமாக வைராலாகி வருவதை பார்த்திருக்கிறோம். நாய்க்கடியால் பல உயிரிழப்புகள் ஏற்படுவதால், நாடு முழுவதும் இப்பிரச்னை விவாத பொருளாக மாறியுள்ளது.
இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் உச்சநீதிமன்றம் தெரு நாய்களுக்கு பொது இடங்களில் உணவு வழங்கக் கூடாது. டெல்லி முழுவதும் உள்ள தெருநாய்களை அப்புறப்படுத்தி, அவற்றை காப்பகங்களில் பராமரிக்க வேண்டும். நாய்களுக்கு கருத்தடை ஊசி, ரேபிஸ் தொற்று தடுப்பூசி போடப்பட வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது. அதன் பின்னர் தெரு நாய்களுக்கு ஆதரவாக போராட்டங்கள் நாடு முழுவதும் ஆங்காங்கே நடைபெற்றது. சென்னையிலும் நடைபெற்றது.
இந்நிலையில் தனியார் தொலைக்காட்சியின் விவாத நிகழ்ச்சியான நீயா நானாவில் ’தெரு நாய்கள் இல்லாத நகரம் வேண்டும் மற்றும் தெரு நாய்க்கும் நகரத்தில் உரிமை உள்ளது’ என்ற இரண்டு தலைப்புகளின் கீழ் விவாதம் நடத்தப்பட்டது.
ஆகஸ்ட் 31ஆம் தேதி ஒளிபரப்பு செய்யப்பட்ட அந்த விவாத நிகழ்ச்சியில் தொகுப்பாளர் கோபிநாத் பேசியது பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. குறிப்பாக அதில் பேசிய படவா கோபி மற்றும் நடிகை அம்முவின் வீடியோக்கள் தற்போது அதிகமாக சமூக வலை தளங்களில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.
அந்த ட்ரோல் வீடியோவில், படவாகோபி இரவில் 9 மணிக்கு மேல் வெளியே ஏன் போறீங்க? என்று தொகுப்பாளர் கோபியை பார்த்து கேட்கிறார். அதற்கு அவர், நான் சும்மா போகிறேன் என்று சொல்ல , அப்போ நாய் தனது இனத்தை பாதுகாக்க அப்படிதான் கடிக்கும் என்று படவா கோபி கூறுகிறார். அதுமட்டுமல்லாமல் உங்களுக்கும் கவுன்சிலிங் தேவைபடுகிறது எனகூறுகிறார். கடைசியாக தெரு நாய்கள் பணக்கார வீட்டுக் குழந்தைகளை எப்போது கடித்து அவர்கள் மரணித்ததாக செய்தி கேட்டுள்ளீர்களா? என்று கேட்டதற்கு, நிகழ்ச்சியில் கலந்து கொண்ட படவா கோபி, அது பாய்ண்ட் இல்லை என்று கூறினார். இதனால் ஆவேசப்பட்ட கோபிநாத் அது தான் பாய்ண்ட், நான் அதைத் தான் பேசுவேன். பணக்கார தெருக்களில் தெரு நாய்கள் பெரும்பாலும் இல்லை என்றார்.
அப்போது குறுகிட்ட நடிகை அம்மு பணக்காரர்கள் காரில் செல்வதால் கடிப்பதில்லை என்றார்.. அதற்கு கோபமான தொகுப்பாளார் கோபி , அப்போ தெருவில் நடப்பவர்கள் யார் என்று கேட்க பணக்காரர்களுக்கு அடுத்த நிலையில் இருப்பவர்கள்தான் என்று அம்மு சொல்ல, அப்போ தெருக்களில் நாய்கள் இருக்கணுமா? இல்லை வேண்டாம் என்று முடிவு எடுக்கும் உரிமை அவர்களுக்குதான் உள்ளது என்றார். மேலும் பிரச்னை என்னுடையதாக இருக்கும்போது, தீர்வு எப்படி உங்களுடையதாக இருக்க முடியும்? " என்று கேள்வி எழுப்பினார். இந்த நிகழ்ச்சி தொடர்பான பல வீடியோக்கள் இணையத்தில் அதிகம் உலா வருகிறது. பலரும் தொகுப்பாளார் கோபிநாத்தின் வாதத்திற்கு சரி என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
இந்தசூழலில் தற்போது அதிகப்படியான விமர்சனத்தை எதிர்கொண்டுவரும் படவா கோபி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு மன்னிப்பு கேட்டுள்ளார். அதில் எடிட் செய்யப்பட்ட வீடியோவை மட்டுமே விஜய் டிவி போட்டுள்ளதாகவும், அன்எடிட்டட் வீடியோவை விஜய் டிவியை போட சொல்லுங்கள், நான் இதயமில்லாமல் எதையும் பேசவில்லை என்று தன் தரப்பு நியாயத்தை பேசியுள்ளார்.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் வீடியோவில் பேசியிருக்கும் அவர், ” நீங்கள் எல்லோரும் பார்த்தது எடிட் செய்யப்பட்ட எபிசோடு. அப்படி போடுவார்கள் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. பொது மக்கள் யாரும் என்னை தவறாக நினைத்துவிடாதீர்கள். நான் பேசியது யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில் அல்ல. என்னுடைய கருத்துகள் அப்படிப் புரிந்துகொள்ளப்பட்டிருந்தால், அதற்கு நான் அதற்கு நான் மனதார மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்" என்றார்.