கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த சிப்காட்டில் தனியார் அட்டை தயாரிப்பு தொழிற் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்நிறுவனத்தில் இருந்து வெளியேறும் துர்நாற்றத்தால் சுற்று வட்டாரத்தில் 3 கி.மீ. தூரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டு வருவதாக குற்றம் சாட்டி பொது மக்கள் 25-க்கும் மேற்பட்டோர் அட்டை உற்பத்தி நிறுவனம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அட்டை உற்பத்தி நிறுவனத்தில் இருந்து நாளொன்றுக்கு 2 லட்சம் லிட்டர் தண்ணீரை வெளியேற்றும் கழிவுகள் சிப்காட்டில் உள்ள குட்டையில் தேக்கப்படுவதால், சுற்றுவட்டார கிராமங்களில் தண்ணீர் மாசு ஏற்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக நோய் தொற்று ஏற்படுவதாகவும், விவசாயம் பாதிப்படைவதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.
அட்டை உற்பத்தி நிறுவனம், சிப்காட் திட்ட அலுவலர், மாவட்ட ஆட்சியர் என பல அதிகாரிகளிடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிவிக்கின்றனர். நடவடிக்கை எடுக்காத காரணத்தால் கிராம மக்கள் ஒன்று கூடி இன்று அட்டை நிறுவனம் முன்பு 25ற்கும் மேற்பட்டோர் கவன ஈர்ப்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து விவசாயி செந்தில் அவர்களிடம் கேட்டபோது, தண்ணீர் மாசு மற்றும் காற்று மாசு ஏற்பட்டுள்ளது குறித்து கிராம மக்கள் அட்டை நிறுவன மேனேஜர் ராஜா மற்றும் காளிதாஸ் அவர்களிடம் கேட்டபோது, காற்று மாசு ஏற்படுவதை நிறுத்த முடியாது, சிப்காட் என்றால் இதெல்லாம் இருக்கத்தான் செய்யும் என மெத்தனமாக பதில் அளித்த காரணத்தால், அதிகாரிகளிடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கை எடுக்காத காரணத்தால், பாதிக்கப்பட்ட மக்களுடன் இன்று போராட்டம் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டோம் என தெரிவித்தார்.
அட்டை நிறுவனத்தில் இருந்து வெளியேறும் கழிவுகளை தடுக்கவும், துர்நாற்றத்தையும் தடுக்க வேண்டுமெனவும் கோரிக்கை வைத்தனர்.
இதுகுறித்து அட்டை உற்பத்தி நிறுவத்தின் மேனேஜர் ராஜா மற்றும் காளிதாஸ் ஆகிய இருவரை பலமுறை தொடர்பு கொண்டபோதும், அவர் தொலைபேசியை துண்டித்துவிட்டார்.
இதுகுறித்து சிப்காட் திட்ட அலுவலர் சிந்து அவர்களிடம் கேட்டபோது, அட்டை நிறுவனம் மாசுபாடு முறையாக கடைபிடிக்கவில்லை என அந்நிறுவனத்திற்கு சிப்காட் திட்ட அலுவலகம் ரூ.5 லட்சம் அபராதம் விதித்துள்ளது. மாசுபாடு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் பார்வையிட்டும் தொடர்ந்து இப்பிரச்சனை இருந்து வருகிறது. இதுகுறித்து நேரில் பார்வையிட்டு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.