தமிழ்நாடு

ஓடும் ஆம்புலன்ஸில் இரு பெண்களுக்கு பிறந்த குழந்தைகள் - சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

webteam

அரியலூர் அருகே இருவேறு பெண்களுக்கு ஆம்புலன்ஸில் குழந்தைகள் பிறந்துள்ளன. கர்ப்பிணிகள் முன்கூட்டியே மருத்துவமனைக்கு வர வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அரியலூர் மாவட்டம் குவாகம் வல்லம் கிராமம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் சங்கீதா. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து 108 ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அப்போது அல்லிநகரம் நெடுஞ்சாலை அருகே ஆம்புலன்ஸ் சென்றபோது சங்கீதாவுக்கு பிரசவ வலி அதிகரித்து குழந்தையின் தலை வெளியே வந்துள்ளது. இதையடுத்து ஆம்புலன்ஸில் இருந்த மருத்துவ உதவியாளர் மணிகண்டன், ஆம்புலன்ஸ் பைலட் ராமானுஜம் உதவியுடன் பிரசவம் பார்த்தனர். இதில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.

அதேபோல் ஜெயங்கொண்டம் அருகே உள்ள சின்னகல்லேரி கிராமம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் மலர்க்கொடி நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து 108 ஆம்புலன்ஸில் மலர்க்கொடியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அப்போது அவருக்கு பிரசவ வலி அதிகரித்து 108 ஆம்புலன்ஸ்லேயே அழகான பெண் குழந்தை பிறந்தது . இதையடுத்து தாய் சேய் இருவரையும் சிகிச்சைக்காக அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு இருவரையும் பரிசோதித்த மருத்துவர் இருவரும் நலமுடன் இருப்பதாக தெரிவித்தார்.

அவசர காலத்தில் சிறப்பாக பணியாற்றிய ஆம்புலன்ஸ் மருத்துவ செவிலியர் மற்றும் ஓட்டுநர் ஆகிய இருவரையும் பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

இந்நிலையில், கடந்த 3 நாட்களில் இதே போல் மொத்தம் 4 குழந்தைகள் பிறந்துள்ளது. பிரசவ வலி எடுத்தால் கர்ப்பிணி தாய்மார்கள் காலம் தாழ்த்தாமல் முன்கூட்டியே மருத்துவமனைக்கு வர வேண்டும் என துணை இயக்குனர் சுகாதார பணிகள் கீதா ராணி கேட்டுக் கொண்டுள்ளார்.