மதுரையில் திமுகவை விமர்சித்து அழகிரி ஆதரவாளர்களால் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மு.க. ஸ்டாலினுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியதால், மகன் என்றும் பாராமல் மு.க.அழகிரியை மறைந்த திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி கட்சியில் இருந்து நீக்கம் செய்தார். கருணாநிதி மறைவுக்குப் பின்னர் திமுகவிற்குள் எப்படியாவது ஐக்கியமாக வேண்டும் என அழகிரி தீவிரம் காட்டியதாவும், ஆனால் ஸ்டாலின் தரப்பில் பலத்த முட்டுக்கட்டை போடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் அவரது ஆதரவாளர்கள் அவ்வப்போது திமுக தலைமையை விமர்சித்து போஸ்டர்கள் ஒட்டுவது வாடிக்கையாக உள்ளது. அதன்படி செல்லூர் பகுதியை சேர்ந்த திமுக நிர்வாகி நாகூர் கனி என்பவர் ஒட்டியுள்ள போஸ்டரில், ''அண்ணே! அண்ணே!! அழகிரி அண்ணே.. நம்ம கட்சி நல்ல கட்சி, மதுரையில் இப்ப ரொம்ப கெட்டுப்போச்சுன்னே...'' என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது.
திமுக நல்ல கட்சி என்றும், மதுரையில் இருக்கக்கூடிய நிர்வாகிகளால், கட்சி கெட்டுப் போய்விட்டது எனவும் அர்த்தம் கொள்ளும் வகையில் அந்த வாசகம் அச்சிடப்பட்டுள்ளது. இது மதுரையில் இருக்கும் திமுக கட்சியினர் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.