கார்த்திகை, மார்கழி மாதங்களில் மாலை அணிந்து சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் ஆந்திரா, கர்நாடக மாநில பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனத்தை முடித்துவிட்டு ஆன்மிக சுற்றுலாவாக தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பல்வேறு கோவில்களுக்கு செல்வது வழக்கம். அதன்படி, இந்தியாவின் தென்கோடி முனையிலுள்ள ராமேஸ்வரம் ராமநாதசாமி திருக்கோவிலில் ஏராளாமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து 22 புண்ணிய தீர்த்தங்களில் நீராடி செல்கின்றனர்.
அவ்வாறு ராமேஸ்வரம் வரும் ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் சொந்த ஊர் திரும்பி செல்லும் வழியில் பாம்பன் பாலத்தில் நின்றவாறு தாங்கள் அணிந்த பழைய கருப்பு வேஷ்டி மற்றும் துண்டுகளை கடலில் வீசி செல்கின்றனர். இதனால் நூற்றுக்கணக்கான கருப்பு துணிகள் கடலில் மிதந்து செல்கின்றன. இவ்வாறு ஐயப்ப பக்தர்கள் வீசி செல்லும் கருப்பு வேட்டி துண்டுகள் கடலுக்கு அடியில் இருக்கும் பவளப்பாறைகள் மீது விழுந்து விடுகிறது.
பொதுவாக பவளப்பாறைகளில் வசித்து இனப்பெருக்கம் செய்யும் மீன்கள், இந்த துணிகள் பளப்பாறையை மூடிவிடுவதால் வசிப்பிடமின்றியும், இனப்பெருக்கம் செய்ய முடியாமல் போவதன் காரணமாக மீன்கள் இடம் பெயர்ந்து செல்லும் நிலை ஏற்படும். இதனால் மீன்பிடிக்கும் தொழிலை முதன்மையாக கொண்டுள்ள மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. அதேபோல் கடலுல் வீசி செல்லும் துணிகள் படகின் பின்புறம் பொருத்தப்பட்டுள்ள பித்தளை விசிறியில் சிக்கி நாட்டுப்படகுகளை இயக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டு வருவதாகவும், நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ள படகு கயிறுகளில் சுற்றி நங்கூரத்தை மேலே எடுக்க முடியாமல் கடும் சிரமப்படுவதாகவும் மீனவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
எனவே பாம்பன் பாலத்தில் இருந்து பழைய வேஷ்டி மற்றும் துண்டுகளை கடலில் வீசி செல்வதை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடல் சார் ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். கடலில் தூக்கி எறியும் வேஷ்டி மற்றும் துண்டுகளை பாம்பனைச் சேர்ந்த யூட்யூப்பர் ஒருவர் தனது சமூக வலைதளப்பக்கத்தில் பதிவிட்ட வீடியோ கவனத்தை ஈர்த்ததுடன், அதிகளவு பகிரப்பட்டு இந்த பிரச்சனை குறித்து அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது.