ஆயன்குளம் கிணறு
ஆயன்குளம் கிணறு pt web
தமிழ்நாடு

ஆயன்குளம் அதிசய கிணறு நிரம்பியதன் காரணம் என்ன? கிராம மக்கள் வைக்கும் கோரிக்கை என்ன?

PT WEB

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே ஆயன்குளம் கிராமத்தில் அமைந்துள்ள கிணறை அதிசய கிணறு என்றே அழைக்கிறார்கள். கடந்த ஆண்டு இந்த கிணற்றின் அருகில் இருந்த குளம் நிரம்பி வெளியேறிய நீர் முழுவதும் கிணற்றுக்குள் சென்று உள்வாங்கியது. தினசரி அசராமல் பல கனஅடி நீரை உள்வாங்கி பலமையில் தூரம் உள்ள கிணறுகளின் நீர்மட்டத்தை உயர்த்தி நன்மை செய்தது. அதனால் இதனை பலமுறை சென்னை ஐஐடியில் இருந்து ஆய்வு செய்து ‘இந்த கிணற்றின் மூலமாக இந்தப் பகுதியில் உள்ள கிணறுகளின் நீர்மட்டத்தை உயர்த்தவும் விவசாயத்தையும் பெருக்கவும் முடியும்’ என ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

இந்த கிணறு பற்றி கேள்விப்பட்டு தென்மாவட்ட மக்கள் பலரும் நேரில் சென்று பார்த்து மகிழ்ந்தனர். இந்த ஆண்டு முழுவதும் வறண்டு காட்சியளித்த இந்த கிணற்றுக்கு இருதினங்களாக பெய்த பலத்த மழையால் நீர்வரத் தொடங்கியது. கடந்த 17ஆம்தேதி முதல், இக்கிணற்றுக்கு 100 முதல் 200 கனஅடி நீர்வரை தண்ணீர் வந்துகொண்டு இருந்தது. கிணற்றின் பக்கவாட்டு சுவர் இடிந்ததாலும் மண் சூழ்ந்ததாலும் அதிசய கிணறு நிரம்பியுள்ளது.

அப்பகுதியைச் சேர்ந்த தினகரன் இது குறித்து கூறுகையில், “3 நாட்களாக பலத்த மழை பெய்தது. 100 கன அடி வரை தண்ணீர் சென்றது. அதிகமாக தண்ணீர் வந்ததால் கிணற்றின் மணல் சரிந்து மொத்தமாக விழுந்து கிணறே மூடி ஒரு சொட்டுத் தண்ணீர் கூட உள்ளே செல்லவில்லை. அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து கிணற்றை மீட்டால் மட்டும்தான் எங்களது விவசாயம் மேம்படும்” என்றார்.

குமரேசன் என்பவர் கூறுகையில், “மண் சரிந்து கிணற்றுக்குள் தண்ணீர் செல்வது நின்றுவிட்டது. கிணற்றுக்குள் தண்ணீர் சென்றால் சுற்றிலும் 15 கிமீ ல் உள்ள கிணறுகளில் தண்ணீர் இருக்கும்” என்றார்.

கிணற்றில் மண் சூழ்ந்ததால் 40 அடி ஆழ கிணற்றுக்குள் உள்ளே உள்ள நீர் உள்வாங்கும் பகுதி முழுவதுமாக அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் நீர் உள்வாங்கும் நிலை மாறி நீர் உள்ள செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.