கிராமப்புற பெண்களின் வாழ்வாதாரத்துக்காக சிறப்பாக சேவையாற்றி வரும் சின்னப்பிள்ளை பெருமாளுக்கு தமிழக அரசு சார்பில் அவ்வையார் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. தலைமைச் செயலகத்தில் நடந்த இந்நிகழ்ச்சியில் சின்னப்பிள்ளை பெருமாளுக்கு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அவ்வையார் விருதையும், ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை மற்றும் 8 கிராம் தங்கப்பதக்கத்தையும் வழங்கி கவுரவித்தார்.
சின்னப்பிள்ளை பெருமாள் மகளிரின் முன்னேற்றத்திற்காக மேற்கொண்டுள்ள பணிகளை பாராட்டி கடந்த 2000 ஆம் ஆண்டு மத்திய அரசு ஸ்ரீசக்தி புரஸ்கார் விருது வழங்கி கவுரவித்திருந்தது. மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த சின்னப்பிள்ளை, களஞ்சியம் பெண்கள் சுய உதவிக்குழுவின் தலைவராக பொறுப்பேற்று கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக கிராமப்புற ஏழைப் பெண்களின் முன்னேற்றத்துக்காக தொடர்ந்து பணியாற்றி வருகிறார்.
2 ஆயிரத்து 589 சுய உதவிக் குழுக்களை உருவாக்கி கிராமப்புற பெண்களின் வாழ்வை வெற்றிகரமாக மாற்றியது மூலம் சமுதாய மேம்பாட்டிற்கு சின்னப்பிள்ளை முக்கியப் பங்காற்றி இருக்கிறார்.