வாடிவாசல்.. தமிழர் பண்டிகையான பொங்கல் திருநாளின் உற்சாகத்துக்கான வாசலும் கூட.. பொங்கல் பண்டிகையொட்டி மதுரையின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி அவனியாபுரத்தில் நடைபெற்றது.
1100 காளைகளும், 900 மாடுபிடி வீரர்களும் பங்கேற்ற இந்த போட்டியில் தொடக்கம் முதலே பரபரப்பும், விறுவிறுப்பும் தொற்றிக்கொண்டது. காலை 7 மணி அளவில், மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆட்சியர் சங்கீதா தலைமையில் தொடங்கிய ஜல்லிக்கட்டு போட்டியில், சுற்றுக்கு 50 பேர் என சுழற்சி முறையில் களமிறக்கப்பட்டனர்.
மொத்தம் 11 சுற்றுகள் நடத்தப்பட்டன. ஒவ்வொரு சுற்றிலும், மாடுபிடி வீரரா? காளையா என்ற சவாலுடன் போட்டி நடந்தது. காளையர்கள் தங்கள் வீரத்தை காட்டிய அதேவேளையில், காளைகளும் களத்தில் நின்று விளையாடின. டிடிவி தினகரனின் காளை வீரர்களுக்கு போக்குக்காட்டி வெற்றிபெற்றது.
வி கே சசிகலாவின் காளை, ஐந்துநிமிடத்திற்கு மேலாக களத்தில் நின்று ஆட்டம் காட்டியது. வெற்றிபெற்ற காளைக்கு அமைச்சர் மூர்ததி சார்பில் கூடுதலாக ஒரு தங்கக்காசு வழங்கப்பட்டது. இதேபோல, அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரின் காளையும் பிடிபடாமல் சென்று வெற்றிக்கனியைத் தட்டிச்சென்றது.
அவனியாபுரம் செல்லையா காளையை அடக்கினால் ஒரு லட்சம் ரூபாய் பரிசு என அறிவிக்கப்பட்டது. வீரர்களின் முயற்சி தோல்வி அடைந்து, காளை வெற்றிபெற்றதால் ஒரு லட்சம் ரூபாயை காளை உரிமையாளரே எடுத்துச்சென்றார்.
விறுவிறுப்பாக நடந்து வந்த போட்டியில் துன்ப நிகழ்வாக, ஒன்பதாவது சுற்றில் நவீன்குமார் என்ற வீரரை மாடு கொம்பால் குத்தியது.இதில் பலத்த காயமடைந்த நவீன், மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 11 ஆவது மற்றும் இறுதிச்சுற்றில், 10 சுற்றுகள் வரை சிறப்பாக விளையாடி தேர்வானவர்கள் உட்பட 30 பேர் கலந்து கொண்டனர். இறுதிச்சுற்றில் வெல்லப்போவது யார் என்ற விறுவிறுப்பு இறுதி நொடி வரை நீடித்தது. மேலும், 40க்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர்.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் திருப்பரங்குன்றம் கார்த்திக் 19 காளைகளை பிடித்து முதலிடம் பிடித்தார். அவருக்கு 8.50 லட்சம் ரூபாய் மதிப்பிலான கார் பரிசாக வழங்கப்பட்டது. மேலும் கன்றுடன் கறவையும் பரிளிக்கப்பட்டது. குன்னத்தூர் அரவிந்த் திவாகர் 15 காளைகளை பிடித்து இரண்டாவது இடம் பிடித்தார். அவருக்கு பைக் பரிசாக வழங்கப்பட்டது.