மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை தொடங்கி பரபரப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. 11 சுற்றுகளுடன் நிறைவடைந்த அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 19 காளைகளைப் பிடித்த திருப்பரங்குன்றம் கார்த்திக் முதலிடம் பிடித்தார். அரவிந்த் 15 காளைகளை பிடித்து 2ஆம் இடம், முரளிதரன் 13 காளைகள் பிடித்து 3ஆம் இடத்தை தக்க வைத்தனர்.
ஜல்லிக்கட்டு போட்டியில் 19 காளைகளைப் பிடித்து முதல் இடம் பிடித்த கார்த்திக்கு ரூ.8.50 லட்சம் மதிப்புள்ள நிசான் கார் பரிசாக வழங்கப்பட்டது. 15 காளைகள் பிடித்து 2ஆம் இடம் பிடித்த அரவிந்த் திவாகருக்கு இரு சக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட்டது.
முதலிடம் பிடித்த சசிகலாவின் காளைக்கு ரூ.10 லட்சம் மதிப்புள்ள டிராக்டர் பரிசாக வழங்கப்பட்டது. சசிகலாவின் காளை வென்றதையொட்டி, அதன் வளர்ப்பாளர் மலையாண்டி முதல் பரிசை பெற்றார். இரண்டாம் இடம் பிடித்த காளை உரிமையாளர் ஜி.ஆர்.கார்த்திக்கு இரு சக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட்டது.
போட்டிக்கு பின்னர் முதல் பரிசு வென்ற வீரர் கார்த்திக் புதிய தலைமுறையிடம் தன்னுடைய மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார். அத்துடன் கோரிக்கை ஒன்றினையும் முன் வைத்தார். “ஜல்லிக்கட்டில் முதல் பரிசு வென்றதில் சந்தோஷம். தினமும் காலை 5 மணிக்கு எழுந்திருச்சு ஓடுவேன். பிஎஸ்சி கம்யூட்டர் சையின்ஸ் படிச்சி இருக்கேன். தனியார் நிறுவனத்தில் வேலை பாக்குறேன்.
மாடுபிடி வீரர்களுக்கு அரசு வேலை இல்லையென்றாலும், இன்ஸ்சூரன்ஸ் கொடுத்தால் நன்றாக இருக்கும். நம்ம அண்ணன் ஒருத்தர் இன்னிக்கு இறந்துட்டாரு. அவங்க வீட்டுக்கு இழப்பீடு கொடுத்தா நல்லா இருக்கும்” என்று உருக்கமாக பேசினார்.
போட்டியின் போது காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நவீன் குடும்பத்திற்கு அரசு தரப்பில் ஆலோசித்து நிச்சயம் செய்யப்படும் என்று அமைச்சர் மூர்த்தி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.