பேருந்தில் சாகச பயணம் pt desk
தமிழ்நாடு

ஆவடி | ஆபத்தை உணராமல் பள்ளி கல்லூரி மாணவர்கள் பேருந்தில் சாகச பயணம்

ஆவடியில் ஆபத்தான முறையில் ஜன்னல் மீது ஏறிக்கொண்டும் ,படியில் தொங்கியபடியும் பயணம் செய்யும் கல்லூரி மாணவர்கள். பள்ளி, கல்லூரி நேரத்தில் குறைவான பேருந்துகள் இயக்கப்படுவதால் மாணவர்கள் அவதியடைந்துள்ளனர்.

PT WEB

செய்தியாளர்: ஆவடி நவீன் குமார்

ஆவடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான அரக்கம்பாக்கம், கன்னியம்மன் நகர், வெள்ளானூர் ஆகிய பகுதிகளில் நாசரேத் கல்லூரி, வெல்டெக் கல்லூரி, அரசு மற்றும் தனியார் பள்ளிகள் பல இயங்கி வருகின்றன. இங்கு சென்னை அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பயின்று வருகின்றனர். இவர்கள் தங்கள் பள்ளி மற்றும் கல்லூரிக்குச் செல்ல ஒரு சில அரசு பேருந்துகளையே நம்பி இருக்கின்றனர்.

ஆனால், அரசு பேருந்துகள் சரிவர வராததால் காலை நேரத்தில் ஒரே பேருந்தில் அதிகப்படியான மாணவர்கள் பயணம் செய்யும் நிலை உள்ளது. இந்த நிலையில், ஒரே நேரத்தில் 300க்கும் மேற்பட்ட பள்ளி கல்லூரி மாணவர்கள் ஆபத்தான முறையில் படிகளில் தொங்கிக் கொண்டும், சிலர் ஜன்னல் மீது ஏறி நின்றபடியும் பயணம் செய்கின்றனர். மேலும் சிலர் பேருந்து கூடவே நீண்ட தூரம் ஓடி வர வேண்டிய சூழலும் உள்ளது.

அளவுக்கு அதிகமான மாணவர்கள் பயணிப்பதால் பேருந்து ஒரு புறமாக சாய்ந்துபடி செல்கிறது. இதனால் மாணவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உருவாகி உள்ளது. எனவே போக்குவரத்துத் துறை இந்த வழித்தடத்தில் அதிகப்படியான பேருந்துகளை இயக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்