ஆவடியை அடுத்த திருநின்றவூர், நெமிலிச்சேரி, அன்னம்பேடு ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் 6 மணி நேரம் முதல் 8 மணி நேரம் வரை தொடர் மின்வெட்டு ஏற்படுவதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டினர். குறிப்பாக இரவு நேரங்களில் மின்சாரம் துண்டிக்கப்படும்போது மின்வாரிய அலுவலகத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டால் தொலைபேசியை அவர்கள் எடுப்பதில்லை என்றும், மின்வாரிய அதிகாரிகளுக்கு நேரடியாக தொலைபேசியில் தொடர்பு கொண்டால் அவர்களும் எடுப்பதில்லை என்றும் அம்மக்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில், கடந்த இரு நாட்களாக நிலைமை மோசமாக இருப்பதாக கூறி பொதுமக்கள் நேற்று இரவு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சுமார் 200-க்கும் மேற்பட்டோர், அரசு பேருந்தை மறித்து சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனை அறிந்த திருநின்றவூர், பட்டாபிராம் முத்தா புதுப்பேட்டை காவல் துறையினர் விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கூட்டத்தை கலைத்தனர். எப்பொழுதும் பரபரப்பாக வாகனங்கள் அதிக அளவில் செல்லக்கூடிய சாலையில் பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்டபோது, திருவள்ளூர் துணை மின் நிலையத்தில் கோளாறு ஏற்பட்டதாகவும், அதை சீரமைக்க தற்போது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் நம்மிடையே தெரிவித்தனர்.