செய்தியாளர்: ஆவடி நவீன் குமார்
ஆவடி அடுத்த கோவில்பதாகை, சாமி நகரைச் சேர்ந்தவர் சம்பத் (44). இவர், கோயம்பேடு கே-11 காவல் நிலையத்தில், சட்டம் ஒழுங்கு பிரிவில் முதல் நிலை காவலராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், நேற்று இவர் ஆவடி கோவில்பதாகையைச் சேர்ந்த நண்பர் பிரபா (44) என்பவருடன் கிறிஸ்ட் காலனி அருகே, கிருஷ்ணா கால்வாயில் குளிக்கச் சென்றார்.
இதையடுத்து பிரபா கரையில் இருந்த நிலையில், சம்பத் கால்வாயில் இறங்கி குளித்துள்ளார். வெகு நேரமாகியும் சம்பத் வெளியே வராததால், பயந்து போன பிரபா, யாருக்கும் தெரிவிக்காமல் வீட்டிற்குச் சென்றுள்ளார். இதைத் தொடர்ந்து சம்பத், வெகு நேரமாகியும் வீட்டுக்கு வராததால், கிருஷ்ணா கால்வாயில் குளிக்க சென்ற கணவரை காணவில்லை என அவரது மனைவி, போலீசில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ஆவடி டேங்க் பேக்டரி போலீசார், ஆவடி தீயணைப்பு வீரர்களுடன் தேடி வந்தனர். அப்போது ஆரிக்கம்பேடு சந்திப்பு அருகே, கிருஷ்ணா கால்வாயில் ஆண் சடலம் மிதப்பதாக தீயணைப்புத் துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த உடலை மீட்டு விசாரித்த போது, அது காணாமல் போன சம்பத் என்பது தெரியவந்தது. சடலத்தை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.