செய்தியாளர்: ஆவடி நவீன் குமார்
ஆவடி அடுத்த திருமுல்லைவாயலில் தனியார் சிபிஎஸ்இ பள்ளி செயல்பட்டு வருகிறது. இதன் அருகே செயல்பட்டு வரும் ஆலய என்ற தனியார் கெமிக்கல் கம்பெனியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில், கம்பெனியில் வைக்கப்பட்டிருந்த தின்னர் மற்றும் பெயிண்ட் ரிமூவர் கொழுந்து விட்டு எரிந்தது. இதனால் வானுயரத்திற்கு கரும்புகை சூழ்ந்ததால் அருகே உள்ள பள்ளியிலும் பாதிப்பு ஏற்பட்டது.
இதையடுத்து உடனடியாக பள்ளி மாணவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர. பேரல்களில் இருந்த கெமிக்கல்கள் வெடித்து தனியார் கம்பெனி முழுவதும் தீப்பற்றி எரிந்தது. தகவல் அறிந்த பெற்றோர் பள்ளியில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து ஆவடி, பூந்தமல்லி, செங்குன்றம், அம்பத்தூர், ஜெ.ஜெ நகர், கோயம்பேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணிகளில் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து மூன்று மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை கட்டுப்படுத்தினர். இந்த தீ விபத்தில் கெமிக்கல் கம்பெனியில் இருந்த அனைத்து பேரல்களும் எரிந்து நாசமானது. அதேபோல் லோடு வாகனம் இருசக்கர வாகனம் என அனைத்தும் தீயில் கருகியது. மேலும் பள்ளி கட்டிடத்தின் பின் பகுதி எரிந்து சேதமடைந்தது. எளிதில் தீப்பற்றக்கூடிய ரசாயன தொழிற்சாலை பள்ளிக்கு அருகே சட்டவிரோதமாக செயல்பட்டது தெரியவந்துள்ளது.
இந்த தீ விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த அமைச்சர் சா.மு.நாசர், தீ விபத்துக்குள்ளான தனியார் கம்பெனியின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பாதிப்புக்கு உள்ளான பள்ளியின் கட்டடம் ஆய்வு செய்த பின்பே மாணவர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்தார். தீ விபத்து குறித்து திருமுல்லைவாயில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.