தமிழ்நாடு

பராமரிப்பின்றி பாம்புகளின் கூடாரமாக மாறிவரும் ஆவடி மாநகராட்சி பூங்காக்கள்

webteam

ஆவடி மாநகராட்சியில் பல லட்சம் செலவில் கட்டப்பட்ட பூங்காக்கள் முறையான பராமரிப்பின்றி பொதுமக்கள் பயன்படுத்த முடியாமல் வீணாகி வருகிறது.

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சியில் 30-க்கும் மேற்பட்ட பூங்காக்கள் உள்ளன. இதில், ஒவ்வொரு பூங்காவும் ரூ.40 லட்சம் முதல் 2 கோடி வரை மதிப்பில் கட்டப்பட்டுள்ளன. இந்த நிலையில் 20-க்கும் மேற்பட்ட பூங்காக்கள் முறையான பராமரிப்பு இன்றி பொதுமக்கள் பயன்படுத்த முடியாத அவல நிலையில் காணப்படுகிறது.

குறிப்பாக ஆவடி வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் உள்ள சிறுவர் பூங்கா, சுமார் 63 லட்சத்தில் கட்டப்பட்டது. இங்கு முறையான பராமரிப்பு இல்லாததால் முழுமையாக சிதலமடைந்து காணப்படுகிறது. விளையாட்டு உபகரணம் மட்டுமின்றி நடைபாதை கூட தெரியாத அளவிற்கு புதர் மண்டி காடுபோல காட்சி அளிக்கின்றது.

இதனால் பாம்புகளின் கூடாரமாக மாறி வருகிறது, அவ்வப்போது இங்கிருந்து குடியிருப்பு பகுதிகளுக்குள் பாம்புகள் நுழைவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். பல்லாயிரக்கணக்கான குடியிருப்பு மத்தியில் இருக்கும் இந்த பூங்காவில் நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்டோர் நடைபயிற்சி செய்கின்றனர். மாலை நேரங்களில் சிறுவர்கள் விளையாடுவதும் வழக்கமாக உள்ளது. தற்போது இருக்கும் சூழலில் அந்தப் பகுதியில் பொழுதுபோக்குக்கு இடமே இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆவடி மாநகராட்சியை தொடர்பு கொண்டு கேட்டபோது பூங்காக்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு விரைவில் மறுசீரமைப்பு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்துள்ளனர். உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாதபோது ஏற்பட்ட அதே நிலை தான் தற்போதும் நிலவுவதாக ஆவடி மாநகர் மக்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.