சென்னை பூந்தமல்லி அருகே ஆட்டோ ரேசில் ஈடுபட்டவர்களை 15 கிலோ மீட்டர் தூரத்துக்கு துரத்திச் சென்று காவல்துறையினர் கைது செய்தனர்.
சென்னை பூந்தமல்லி அருகே வண்டலூர் - மீஞ்சூர் 400 அடி சாலையில் ரேஸ் தடுப்புக்குழு உதவி காவல் ஆய்வாளர் சாம் சுந்தர், சரவணன், சாலமன் ஆகியோர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது நெமிலிச்சேரியில் இருந்து குன்றத்தூர் நோக்கி ஆட்டோவில் சிலர் ரேஸ் வந்துள்ளனர். அதிவேகத்தில் வந்த ஆட்டோக்களையும், அவற்றை சுற்றி 50-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் வந்தவர்களையும் கண்ட காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். ரேஸ் வந்தவர்களை தடுத்து நிறுத்த காவல்துறையினர் முயன்றனர். ஆனால் அவர்கள் தப்பிவிட்டனர். இதனையடுத்து ரேஸ் சென்றவர்களை இருசக்கர வாகனத்திலும், காரிலும் காவல்துறையினர் துரத்திச் சென்றனர்.
முடிந்தால் எங்களை பிடித்துப் பாருங்கள் என்று ரேஸில் சென்றவர்கள், காவல்துறையினருக்கு சவால் விட்டனர். ரேஸ் சென்றவர்கள் காவல்துறையினரை பற்றி மட்டுமல்ல சாலையில் சென்ற பொது மக்களை பற்றியும் கவலைப்படவில்லை. பந்தயத்தில் வெல்வது மட்டுமே அவர்களது நோக்கமாக இருந்தது. அதற்காக ஒருவரை ஒருவர் முந்திச்செல்ல தாறுமாறாக ஆட்டோவை ஓட்டிச்சென்றனர். இதனால் சாலையில் சென்ற பிற வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். ஓரிடத்தில் முந்திச் செல்லும் முயற்சியின் போது, ஒரு ஆட்டோ மற்றொரு ஆட்டோ மீது மோத அந்த ஆட்டோ சாலையோரம் நின்ற லாரி மீது மோதியது. கழுவும் மீனில் நழுவும் மீனாக ரேஸ் சென்றவர்கள் சாலையில் துள்ள, அவர்களை விடாமல் காவல்துறையினர் துரத்தினர்.
இந்த ரேஸிங், சேஸிங் சுமார் ஒருமணி நேரம் நீடித்தது. கிட்டத்தட்ட15 கிலோ மீட்டர் துரத்திச் சென்ற காவல்துறையினர், ஆட்டோ ரேஸ் சென்ற சுரேஷ், மணிகண்டன், சதீஷ், சங்கர் மற்றும் ஆட்டோ ரேஸை செல்போனில் படம்பிடித்த பாஸ்கர் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 6 ஆட்டோக்கள் மற்றும் ஒரு இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. தப்பியோடிய மேலும் சிலரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். ஆட்டோ ரேஸில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல்துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.