நெல்லையில் கந்துவட்டி கொடுமை தொடர்பாக புகார் அளிக்க வந்தவரை போலீஸ் தாக்கியதால், அவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
நெல்லை மாவட்டம் பணகுடி பகுதியை சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் சுவாமிதாஸ். இவர் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு ஆட்டோ வாங்குவதற்காக, அதே பகுதியை சேர்ந்த திரவியம் என்பவரிடம் ரூ.1.50 லட்சம் வட்டிக்கு வாங்கியுள்ளார். அதற்கு வட்டியாக மாதந்தோறும் ரூ.15 ஆயிரம் என 13 மாதங்கள் கொடுத்துள்ளார். அதன்பிறகு கொடுக்க முடியவில்லை என்பதால் பிழைப்புக்கு வைத்து இருந்த ஆட்டோவை விற்று 1.30 லட்சம் கொடுத்துள்ளார். அதுபோக இன்னும் 20 ஆயிரம் ரூபாய் தான் கொடுக்க வேண்டும். ஆனால் அதுக்கு பிறகும் நீ கொடுத்தது எல்லாம் வட்டிக்கே ஈடாகிவிட்டது என்று திரவியம் கூறியதாக சொல்லப்படுகிறது.
இதனால் முதலமைச்சர் தனிப்பிரிவு, மாவட்ட ஆட்சியர் மற்றும் கண்காணிப்பாளருக்கும் சுவாமிதாஸ் புகார் அனுப்பியுள்ளார். மேலும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால், நேற்று மாலை சுவாமிதாஸ் பணம் கொடுத்த ஆவணங்களை பணகுடி காவல் நிலையத்தில் கொடுத்து நடவடிக்கை எடுக்கும்படி புகார் அளிக்க சென்றுள்ளார். அப்போது போலீசார் அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அவர், காவல் நிலையத்திலேயே விஷத்தை குடித்துள்ளார். இதையடுத்து உடனே போலீசார் அவரை பணகுடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்ந்தனர். அங்கு முதலுதவி அளித்துவிட்டு நாகர்கோவில் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளார்.