வெளிநாட்டு பெண்ணுக்கும் ஆட்டோ ஓட்டுநருக்கும் நடந்த வாக்குவாதத்தில், அந்த பெண்ணை அறுவறுக்கத்தக்க வகையில் ஆபாசமாக பேசிய ஆட்டோ ஓட்டுனருக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன.
பங்களாதேஷ் நாட்டை சேர்ந்த பெண் ஒருவர், சென்னை கோட்டூர்புரத்தில் தங்கி படித்து வருகிறார். இந்த நிலையில், அவர் தங்கி இருக்கும் பகுதியில் இருந்து திருவான்மியூர் செல்வதற்காக நேற்று காலை ஆன்லைனில் ஆட்டோ புக் செய்துள்ளார். தொடர்ந்து, ஆட்டோவில் ஏறி திருவான்மியூரில் இறங்கியபோது, 133 ரூபாய் பில் வந்திருக்கிறது. மேலும் 30 ரூபாய் போட்டு 163 ரூபாயாக தருமாறு ஆட்டோ ஓட்டுநர் கேட்டுள்ளார். இதற்கு, வெளிநாட்டு பெண் தரமுடியாது எனக்கூறி, 200 ரூபாய் நோட்டை நீட்டி மீதிப்பணத்தை கேட்டுள்ளார்.
அதற்கு ஆட்டோ ஓட்டுநர் தன்னிடம் சில்லரை இல்லையெனவும், 163 ரூபாயை தருமாறு கேட்ட நிலையில், இருவருக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. சத்தமாக பேசிய ஆட்டோ ஓட்டுனரிடம் என்னிடம் கத்த வேண்டாம் என்று அந்த பெண் சத்தமாக பேசி, Stupid என்று திட்டியுள்ளார். அப்போது, அறுவறுக்கத்தக்க வகையில் அந்த பெண்ணை திட்டிய ஆட்டோ ஓட்டுனர், எனக்கான பணத்தை தரும்படி கூற, புரியாமல் திகைத்த பெண் ரூபாய் நோட்டை தூக்கி எறிந்துவிட்டுச் சென்றார்.
இந்த நிலையில், ரூபாய் நோட்டை எடுத்து தூக்கி எறிந்த ஆட்டோ ஓட்டுனர், கீழே இறங்கி அந்த பெண்ணை அடிக்கப்பாய்ந்தார். இந்த நிலையில், இதுதொடர்பான வீடியோவை சமூகவலைதளத்தில் பதிவிட்ட பாதிக்கப்பட்ட பெண், “இங்கு பெண்களுக்கு பாதுகாப்பில்லை எனவும்.. யாரும் உதவ முன்வரவில்லை” என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வீடியோ காட்சிகளை வைத்து அடையாறு சைபர் கிரைம் போலீசார் வழக்குபதிவு செய்து, பெண்ணை ஆபாசமாக பேசிய ஆட்டோ ஓட்டுநர் பால்பாண்டியை கைது செய்தனர். இந்த சம்பவம் பலரதரப்பினரிடையே விமர்சனங்களை பெற்று வந்தது.
இந்த நிலையில், விரைந்து நடவடிக்கை எடுத்த சென்னை காவல்துறைக்கு நன்றி தெரிவித்த மாணவி, ஆட்டோ ஓட்டுநர் மன்னிப்பு கேட்டதாலும், காவல் ஆய்வாளர் கேட்டுக்கொண்டதாலும் புகாரை திரும்பப் பெறுவதாக தெரிவித்துள்ளார்.
ஆனால் ஆட்டோ ஓட்டுநர் மீது என்ன தவறு இருக்கிறது, அந்த பெண் தான் முதலில் Stupid என்று திட்டிவிட்டு, என்னிடம் சத்தமாக பேசாதே என்று கூறுகிறார், அதற்குபிறகே ஓட்டுநர் கோவத்தில் வார்த்தைகளை விடுகிறார், தொடர்ந்து அந்தபெண் பணத்தை அவர்மீது தூக்கி எறிந்துவிட்டு செல்கிறார், இதில் எங்கிருந்து ஆட்டோ ஓட்டுநர் அந்த பெண்ணை அடிக்க முயன்றார், எதற்கு அவரை கைது செய்யவேண்டும் என்ற விமர்சனங்களையும் சமூகவலைதளத்தில் பலர் பதிவிட்டு வருகின்றனர்.