கைது செய்யப்பட்ட நபர்கள்
கைது செய்யப்பட்ட நபர்கள்  file image
தமிழ்நாடு

மிளகாய் பொடி தூவி 60 லட்சத்தை கொள்ளையடிக்க முயற்சி; முன்னாள் காவலர் உட்பட 8 பேர் கைது-நடந்தது என்ன?

PT WEB

திருப்பத்துாரில் பிரபல நகைக்கடை ஒன்றில் ஜோன்றம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த அஜீத்குமார் (23), தென்றல் நகரைச் சேர்ந்த பரத் (35) இருவரும் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் நகைக் கடையில் வியாபாரமான பணம் ரூ.60 லட்சத்தைக் கிருஷ்ணகிரி மெயின் ரோட்டில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் செலுத்துவதற்காக அஜித் குமார், பரத் இருவரும் நேற்று முன்தினம் பகல் 12 மணியளவில் பைக்கில் சென்றுள்ளனர். அப்போது அவர்களை நோட்டமிட்டு பின் தொடர்ந்து ஒரே பைக்கில் ஹெல்மெட் அணிந்து சென்ற இரு மர்ம நபர்கள் புதுப்பேட்டை மெயின் ரோடு அருகே அஜித் குமார் மற்றும் பரத் இருவர் முகத்திலும் மிளகாய்ப் பொடி தூவி அவர்களை நிலை குலையச் செய்து அவர்களிடம் இருக்கும் பணத்தைப் பறிக்க முயற்சி செய்துள்ளனர்.

கைதானவர்

இதனைச் சுதாரித்துக் கொண்ட இருவரும் பணத்தை இறுக்கிப் பிடித்துக் கொண்டு கூச்சலிட்டனர். உடனே அக்கம் பக்கத்தினர் விரைந்து வருவதற்குள் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

இது குறித்து நகைக்கடை உரிமையாளர் கவுசிக் கொடுத்த புகாரின் பேரில், திருப்பத்து நகர போலீசார் வழக்குப் பதிவு செய்து அங்குப் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டதில் முன்னாள் சிறைக் காவலர் பிரபாகரன் உள்ளிட்ட எட்டு பேரைக் கைது செய்தனர்.

இது குறித்து போலீசார் கூறுகையில், “இந்த வழக்கில் விஷமங்கலத்தை சேர்ந்த பிரபாகரன்(28) எனும் முன்னாள் சிறைக் காவலர், செலந்தம்பள்ளியை சேர்ந்த ராஜ்குமார்(25) எனும் கார் டிரைவர், முத்தமிழ் நகரைச் சேர்ந்த சுரேஷ் (28) எனும் தனியார் வங்கி ஊழியர், வேலன் நகரைச் சேர்ந்த ராஜேஷ் (35) எனும் கார் டிரைவர். பெங்களூரைச் சேர்ந்த ரவிசங்கர்(37) எனும் கம்பி கட்டும் தொழிலாளி, சென்னையைச் சேர்ந்த சரவணன், நிதிஷ், வெங்கடேசன் ஆகிய எட்டு பேரைக் கைது செய்துள்ளோம்.

கைதானவர்

விசாரணையில் தெரியவந்தவை...

விஷமங்கலத்தை சேர்ந்த பிரபாகரன் என்பவர் வேலுார் மத்தியச் சிறையில் காவலராக பணியாற்றி வந்த போது சதித் திட்டம், கொள்ளை முயற்சி போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டதால் கடந்த 2017ம் ஆண்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து பிரபாகரன் காவலர் பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றுள்ளார்.

இந்நிலையில் வேலை பறிபோனதால் கிருஷ்ணகிரி மெயின் ரோட்டில் உள்ள தனியார் வங்கியில் வேலை செய்யும் அவர் நண்பரான சுரேஷ் என்பவரிடம் ரூ.25 லட்சம் கடன் பெற்றுக் கொண்டு திருப்பி தர முடியாமல் தவித்து வந்துள்ளார். அவருடைய கூட்டாளியான சுரேஷ் வேலை செய்யும் தனியார் வங்கியில் அடிக்கடி அதிக அளவில் யார்? யார்? பணம் செலுத்துகிறார்கள் அவர்கள் பணத்தை எப்படிக் கொண்டு வருகிறார்கள், அவர்கள் என்ன தொழில் செய்கிறார்கள், என்ற விபரத்தைத் தெரிந்து கொண்டனர்.

அதன்படி சம்பந்தப்பட்ட நகைக் கடையில் இருந்து தினமும் லட்சக்கணக்கில் பணம் செலுத்த ஒரு பைக்கில் இருவர் வருவார்கள் குறிப்பாகப் பண்டிகை காலங்கள், முகூர்த்த காலங்களில் அதிக அளவில் பணம் செலுத்த வருவார்கள் என்ற விபரத்தை முதலில் அறிந்து கொண்டனர்.

சிகிச்சை பெற்று வரும் ஊழியர்கள்

பின்னர் சம்பந்தப்பட்ட நகைக்கடையில் இருந்து பணம் எடுத்துச் செல்பவர்களைக் கடந்த ஒரு மாதமாகத் தீவிரமாக நோட்டமிட்டு சம்பவத்தன்று பெங்களூரு மற்றும் சென்னை பகுதியைச் சேர்ந்த நபர்களைக் கொண்டு வழிப்பறியில் ஈடுபட முயன்றுள்ளார். அப்போது அப்பகுதியில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராவில் பதிவான பதிவில் பல இடங்களில் பிரபாகரன் இருப்பது தெரிந்தது. இதனால் சந்தேகத்தின் பேரில் பிரபாகரனைப் பிடித்து விசாரணை செய்ததில், வழிப்பறியில் ஈடுபட்டது பிரபாகரன் உள்ளிட்ட எட்டு பேர் எனத் தெரியவந்தது.

பணத்துடன் செல்லும் ஊழியர்கள்

இதனைத் தொடர்ந்து எட்டு பேரையும் கைது செய்து திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்தியச் சிறையில் அடைத்தோம்" என்றனர்.

கடனை அடைக்க முன்னாள் காவலரே சதித் திட்டம் தீட்டி கொள்ளையில் ஈடுபட முயன்ற பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.