சாயல்குடி அருகே மணல் டிராக்டரை தடுத்து நிறுத்திய வட்டாட்சியர் வாகனத்தின் மீது டிராக்டரை மோதி தப்பியோடியவர்களில் ஒருவர் கைது செய்பட்டுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியை அடுத்த மணிவலைப்பகுதியில் சமூக விரோதிகள் சட்டவிரோதமாக மணல் அள்ளுவதாக வட்டாட்சியருக்கு வந்த தகவலையடுத்து, நேற்று அங்கு ரோந்து சென்ற தாசில்தார் முத்துலட்சுமி அந்தப்பகுதியில் மணல் ஏற்றி வந்த டிராக்டரை தடுத்து நிறுத்தியுள்ளார். ஆனால், கொஞ்சமும் எதிர்பாராத நேரத்தில் வட்டாட்சியர் வந்த அரசு ஜீப் மீது மணல் ஏற்றி வந்த டிராக்டரை மோதச்செய்து பதட்டத்தை ஏற்படுத்தி மணல் திருடர்கள் அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டனர். இதில் அரசு ஜீப்பின் முன்பகுதி சேதமடைந்துள்ளது.
இதனையடுத்து அச்சமும் அதிர்ச்சியுமடைந்த வட்டாட்சியர் முத்துலட்சுமி, கொடுத்த புகாரின் அடிப்படையில், தப்பிச்சென்ற மணல் திருடர்களை அவர்கள் விட்டுச்சென்ற ஐந்து மண்வெட்டிகள் மற்றும் ஒரு பல்சர் பைக்கை கைப்பற்றி சாயல்குடி போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில், எம்.கரிசல்குளத்தைச் சேர்ந்த ராம்குமார் என்பவரை வட்டாட்சியர் முத்துலட்சுமியை கொலை செய்ய முயன்றதாக கொலை முயற்சி, 307, 341, 353, 379 உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் கைது செய்துள்ளனர். மேலும் இதில் தொடர்புடைய அதே ஊரைச்சேர்ந்த தவமுருகன் உள்ளிட்ட 2 பேரை சாயல்குடி போலீசார் தேடி வருகின்றனர்.