மேலூர் அருகே 190.74 ஏக்கர் பஞ்சமி நில விவகாரத்தைத் தொடர்ந்து பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி முத்துராஜா மீது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதல் தொடர்பாக, SC/ST வன்கொடுமை தடுப்புச் சட்டம் உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் 10 பேருக்கு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், முக்கிய குற்றவாளிகளான அஜித், கருப்பசாமி, மகாராஜன் ஆகியோர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி முத்துராஜா, கீரனூர் பகுதியில் உள்ள மொத்தம் 190.74 ஏக்கர் பஞ்சமி நிலங்களை நிலமற்ற பட்டியல் சமூக மக்களுக்கு வழங்க வேண்டும் எனக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ரிட் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி, மனுதாரரின் கோரிக்கையை மாவட்ட ஆட்சியர் மற்றும் நில நிர்வாக ஆணையர் நான்கு மாதங்களுக்குள் சரியான விசாரணையுடன் உரிய நடவடிக்கை எடுக்க தீர்மானிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
இந்த நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு, பஞ்சமி நிலங்களை பல ஆண்டுகளாக சட்டவிரோதமாக பயன்படுத்தி வந்ததாக குற்றச்சாட்டு எழுந்த மாற்றுச் சமூகத்தவர் முன்விரோதத்தில் இருந்துவந்ததாக கூறப்படுகிறது. இதன் பின்னர், அஜித், கருப்பசாமி, மகாராஜன், சின்னதுரை மற்றும் 18 வயது இளைஞர் உள்ளிட்ட குழுவினர் முத்துராஜாவை கூலி வேலையென அழைத்து சென்று கொடூரமாக தாக்கியுள்ளனர். பட்டாக்கத்தியால் சரமாரியாக வெட்டியதில் அவரது வலது கை துண்டிக்கப்பட்டது. மேலும், நில விவகாரத்தில் மீண்டும் தலையிட்டால் குடும்பத்தோடு உயிரை பறிப்போம் என மிரட்டி தப்பிச் சென்றனர்.
இந்தத் தாக்குதலில் கடுமையாக காயமடைந்த முத்துராஜா மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதைத்தொடர்ந்து பத்துக்கும் மேற்பட்டோர் மீது மேலூர் காவல்துறையில் முத்துராஜா புகார் அளித்தார். இதில் அஜித், கருப்பசாமி, மகாராஜன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்றவர்களை கைது செய்ய போலீசார் தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.